dinamalar telegram
Advertisement

எனது 'ஹீரோ' நடராஜன் * கபில் தேவ் புகழாரம்

Share

புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடரில் எனது 'ஹீரோ' நடராஜன் தான்,'' என கபில் தேவ் பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தின் சேலத்தை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் 29. கடந்த 13வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் ஐ தராபாத் அணிக்காக 16 போட்டிகளில் பங்கேற்று, 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 'யார்க்கர்களாக' வீசி மிரட்டினார். முன்னணி வீரர்கள் கோஹ்லி, டிவிலியர்சை அவுட்டாக்கினார். தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய 'டுவென்டி-20' அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய அணிக்கு முதன் முதலில் உலக கோப்பை வென்று தந்த 'ஜாம்பவான்' கபில் தேவ் 61, கூறியது:

ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசனில் எனது 'ஹீரோ' நடராஜன் தான். இளம் வீரரான இவர் துணிச்சலாக பல்வேறு 'யார்க்கர்' பந்துகளை வீசினார். இது சிறந்த பந்து வீச்சாக இருந்தது. இன்று மட்டுமல்ல. கடந்த 100 ஆண்டுகளில் இவரைப் போல யாரும் இவ்வளவு துல்லியமாக, சிறப்பாக 'யார்க்கர்கள்' வீசியது இல்லை. அனைத்தும் சிறந்தவைகளாக இருந்தன.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி மீண்டும் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது பேட்ஸ்மேன்களின் கைகளில் தான் உள்ளது. கடந்த முறை போல பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு இன்னிங்சிலும் 400 ரன்கள் குவிக்க வேண்டும். இது சாத்தியமா என்று தெரியவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால், தொடரை வெல்வதில் எவ்வித சிரமமும் இருக்காது. ஏனெனில் இந்திய வேகப்பந்துவீச்சு பலமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement