Advertisement

சென்னை அணிக்கு வாய்ப்பு: பிரட் லீ கணிப்பு

Share

சிட்னி: ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன், செப்.19ல் ஐக்கிய எமிரேட்சில் துவங்குகிறது. இதில், மூன்று முறை சாம்பியன் சென்னை அணி மீண்டும் சாதிக்க காத்திருக்கிறது. கேப்டன் 'கூல்' தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, வாட்சன் என முக்கிய வீரர்கள் அப்படியே இடம் பெற்றிருப்பது பலம். இவர்கள் மூத்த வீரர்கள் என விமர்சிக்கப்பட்டாலும், நீண்ட அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும். ஹர்பஜன், தாகிர், பியுஸ் சாவ்லா, கரண் சர்மா, சான்ட்னர் அடங்கிய 'சுழல்' கூட்டணி எதிரணிக்கு தொல்லை தருவது உறுதி. தவிர, சென்னை போன்றே எமிரேட்சிலும் வெப்பமான சூழல் காணப்படுவது சாதகம்.

இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் 'வேகப்புயல்' பிரட் லீ கூறியது: ஐ.பி.எல்., தொடரில் நீண்ட காலம் விளையாடிய அனுபவம் சென்னை அணி வீரர்களுக்கு உண்டு. சீனியர்களாக இருப்பது தான் பலம். எமிரேட்சில் வரும் நாட்களில் வெயில் கொளுத்தும் என வானிலை தெரிவிக்கிறது. இதனால் ஆடுகளத்தில் பந்துகள் நன்கு சுழலும். இது சென்னை அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான விஷயம். சொந்த மண்ணில் விளையாடுவதை போல உணரலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், சென்னை அணி கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளர் கும்ளேவின் ஆலோசனை கைகொடுக்கும்.



'கிடார்' வாசியுங்கள்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு வளையத்தை விட்டு வீரர்கள் வெளியே செல்ல முடியாது. எமிரேட்சில் உள்ள ஓட்டல் அறையிலேயே முடங்க வேண்டியிருக்கும். இவர்கள் 'கிடார்' வாசிக்க கற்றுக் கொண்டு பொழுதை கழிக்கலாம்.

இவ்வாறு பிரட் லீ கூறினார்.



சேப்பாக்கத்தில் பயிற்சி

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ரெய்னா, அம்பதி ராயுடு, ஹர்பஜன் சிங், பியுஸ் சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் 6 நாட்கள் (ஆக.15--20) பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளனர். இது குறித்து சென்னை அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''கேப்டன் தோனியின் திட்டப்படி பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும். தனி விமானம் மூலம் சென்னைக்கு ஆக.14ல் வீரர்கள் வர உள்ளனர். ஓட்டல், மைதானத்தை தவிர வேறு எங்கும் செல்ல மாட்டர். பயிற்சியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. சென்னை அணியின் பவுலிங் ஆலோசகர் பாலாஜி மேற்பார்வையில் ஆக. 15ல் பயிற்சி முகாம் துவங்கும். சென்னையில் தங்கி இருக்கும் போது வீரர்களுக்கு இரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதில் 'நெகட்டிவ்' என வந்தவர்கள் மட்டும் ஆக.21ல் துபாய்க்கு புறப்பட்டுச் செல்வர்,'' என்றார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement