Advertisement

அசராமல் வென்ற அயர்லாந்து: நொந்து போனது இங்கிலாந்து

Share

சவுத்தாம்ப்டன்: உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்தது அயர்லாந்து. கடைசி ஓவர் வரை பரபரப்பான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்டிர்லிங், பால்பிர்னி சதம் விளாச, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இங்கிலாந்து சென்ற அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது.



அயர்லாந்து அணியில் சிமி சிங் நீக்கப்பட்டு 'ஆல்-ரவுண்டர்' மார்க் அடேர் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ரீஸ் டாப்லேவுக்கு பதிலாக டாம் கரான் தேர்வானார். 'டாஸ்' வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (1), ஜானி பேர்ஸ்டோவ் (4) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. ஜேம்ஸ் வின்ஸ் (16) நிலைக்கவில்லை. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 44 ரன் எடுத்து திணறியது.



பின் இணைந்த கேப்டன் இயான் மார்கன், டாம் பன்டன் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. லிட்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்கன், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 14வது சதமடித்தார். அபாரமாக ஆடிய மார்கன் (106) நம்பிக்கை தந்தார். டாம் பன்டன் (58) அரைசதம் கடந்தார். மொயீன் அலி (1) ஏமாற்றினார். சாம் பில்லிங்ஸ் (19) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய டேவிட் வில்லே (51) கைகொடுத்தார். அடில் ரஷித் (3) 'ரன் அவுட்' ஆனார். சாகிப் மஹ்மூத் (12) நிலைக்கவில்லை.



இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 328 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. டாம் கரான் (38) அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து சார்பில் கிரெய்க் யங் 3 விக்கெட் வீழ்த்தினார்.



இரண்டு சதம்: சவாலான இலக்கை விரட்டிய அயர்லாந்து அணிக்கு கரேத் டெலானி (12) ஏமாற்றினார். பின் இணைந்த பால் ஸ்டிர்லிங், கேப்டன் ஆன்டி பால்பிர்னி ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. சிக்சர், பவுண்டரிகளாக விளாசிய ஸ்டிர்லிங், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 9வது சதமடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பால்பிர்னி, தனது 6வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 214 ரன் சேர்த்த போது ஸ்டிர்லிங் (142) 'ரன்-அவுட்' ஆனார். பொறுப்பாக ஆடிய பால்பிர்னி (113) நம்பிக்கை தந்தார்.



கடைசி ஓவரில் அயர்லாந்து வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. சாகிப் மஹ்மூத் வீசிய 50வது ஓவரின் முதல் 3 பந்தில் 7 ரன் கிடைத்தது. நான்காவது பந்தை வீணடித்த கெவின் ஓபிரையன், 5வது பந்தில் ஒரு ரன் எடுத்து வெற்றியை உறுதி செய்தார்.

அயர்லாந்து அணி 49.5 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹாரி டெக்டர் (29), கெவின் ஓபிரையன் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

இங்கிலாந்து அணி 2-1 என, தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.



இரண்டாவது முறை

ஒருநாள் போட்டி வரலாற்றில், இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி 2வது முறையாக வெற்றி பெற்றது. இவ்விரு போட்டியிலும் அயர்லாந்து அணி 329 ரன்கள் எடுத்து வென்றது. ஏற்கனவே 2011ல் பெங்களூருவில் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் அயர்லாந்து அணி (329/7, 49.1 ஓவர்) 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை (327/8, 50 ஓவர்) வென்றிருந்தது.

இதுவரை இவ்விரு அணிகள் 13 ஒருநாள் போட்டியில் மோதின. இதில் இங்கிலாந்து 10, அயர்லாந்து 2ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.



214 ரன்கள்

ஸ்டிர்லிங், பால்பிர்னி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 214 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டி அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த அயர்லாந்து ஜோடி பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தில் கெவின் ஓபிரையன், வில்லியம் போர்டர்பீல்டு ஜோடி (227 ரன், எதிர்: கென்யா, 2007, 4வது விக்கெட்) உள்ளது.



இந்திய சாதனை முறியடிப்பு

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை (329) 'சேஸ்' செய்த அன்னிய அணிகளுக்கான பட்டியலில் இந்தியாவின் சாதனையை முறியடித்து அயர்லாந்து அணி. இதற்கு முன், 2002ல் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 'நாட்வெஸ்ட்' பைனலில் இந்திய அணி 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றிருந்தது இப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு முகமது கைப், யுவராஜ் சிங் ஜோடி கைகொடுத்தது.



20 புள்ளி

இந்தியாவில், 2023ல் உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தகுதிச் சுற்றாக, உலக கோப்பை சூப்பர் லீக் தொடரை ஐ.சி.சி., அறிமுகப்படுத்தியது. இதன் முதல் தொடராக இங்கிலாந்து, அயர்லாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2 போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து அணி (10 புள்ளி) 2வது இடம் பிடித்தது.

இப்புள்ளிப்பட்டியலில் 'டாப்-7' பிடிக்கும் அணிகள் உலக கோப்பையில் விளையாட நேரடியாக தகுதி பெறும். தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றது.



பெங்களூரு 'ஹீரோ'

பெங்களூருவில், 2011ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் 113 ரன்கள் எடுத்த கெவின் ஓபிரையன் அயர்லாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். இதபோல, மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய கெவின் ஓபிரையன், மீண்டும் வெற்றிக்கு கைகொடுத்தார்.





Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement