Advertisement

பாயுமா... பதுங்குமா இந்தியா * இரண்டாவது டெஸ்ட் துவக்கம்

கிறைஸ்ட்சர்ச்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் இந்தியா பாயுமா அல்லது பதுங்குமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வெலிங்டன் டெஸ்டில் தோல்வியடைந்த இந்தியா, தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், கிறைஸ்ட்சர்ச் ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று துவங்குகிறது.

பிரித்வி தயார்

இந்திய அணிக்கு துவக்கத்தில் மயங்க் அகர்வால் நம்பிக்கை தருகிறார். பிரித்வி ஷா (16, 14) ஏமாற்றினார். தவிர வலது கால் வீக்கத்தால் அவதிப்பட்ட இவர், மீண்டு விட்டாலும் இன்று களமிறங்குவது உறுதியில்லை. சுப்மன் கில் துவக்க வாய்ப்பு பெறலாம்.

'மிடில் ஆர்டரில்' புஜாரா, ரன் எடுப்பதையே மறந்து விட்டார் போல. இது அடுத்து வரும் கேப்டன் கோஹ்லி, ரகானேவுக்கு நெருக்கடி தருகிறது. இதில் கோஹ்லி கடைசி 20 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்காதது வருத்தமாக உள்ளது. ஹனுமா விஹாரியும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை.

உமேஷ் வருகை

பந்து வீச்சில் முதல் டெஸ்டில் 5 விக்கெட் சாய்த்த இஷாந்த் விலகுவது பெரும் பாதிப்பு. இவருக்குப் பதில் உமேஷ் யாதவ் இடம் பெறுகிறார். 'சீனியர்' முகமது ஷமி, பும்ரா இருவரும் சிறப்பாக செயல்பட்டால், இந்தியா வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

சுழலில் அஷ்வின், 3 விக்கெட் வீழ்த்தினாலும் பேட்டிங்கில் கொஞ்சம் கூட கைகொடுக்கவில்லை. இதனால் பேட்டிங்கை பலப்படுத்த ஜடேஜா வருவார் எனத் தெரிகிறது. ஆனால் அன்னிய மண்ணில் ஜடேஜாவை விட அஷ்வின் பவுலிங் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் முடிவெடுப்பதில் குழப்பம் நிலவுகிறது.

வாக்னர் பலம்

நியூசிலாந்து அணிக்கு டாம் லதாம், கேப்டன் வில்லியம்சன், அனுபவ ராஸ் டெய்லர், 'ஆல் ரவுண்டர்' கிராண்ட்ஹோம் என பேட்டிங் படை நீள்கிறது. பின் வரிசையில் ஜேமிசனும் ரன் மழை பொழிவது கூடுதல் பலம்.

பவுலிங்கை பொறுத்தவரையில் சவுத்தீ (9 விக்.,), பவுல்ட் (5 விக்.,) கூட்டணி மிரட்டுகிறது. இவர்களுடன் ஜேமிசனும் அச்சம் தருகிறார். முதல் டெஸ்டில் இடம் பெறாத டெஸ்ட் 'ஸ்பெஷலிஸ்ட்' வாக்னரும் வருவதால் பந்துகளை 'சுவிங்' செய்வது, காற்றின் வேகத்துக்கு ஏற்ப ஆடுகளத்தை பயன்படுத்துவது என நியூசிலாந்து பந்து வீச்சு அஞ்சத்தக்கதாக உள்ளது.ஆடுகளம் எப்படி

கிறைஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவல் ஆடுகளத்தில் புற்கள் 12 செ.மீ., உயரத்தில் உள்ளன. இது வெலிங்டனை விட குறைவு என்பதால், பந்துகள் கூடுதல் வேகத்தில் வரும். அதிகமாக 'சுவிங்' ஆகும் என்பதால், பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது.முதன் முறை

கிறைஸ்ட்சர்ச், ஹாக்லே ஓவல் மைதானத்தில் இந்திய அணி முதன் முறையாக டெஸ்டில் பங்கேற்கிறது. நியூசிலாந்து அணி இங்கு விளையாடிய 7 டெஸ்டில் 4ல் வென்றது. தலா ஒரு தோல்வி, 'டிரா' செய்தது. ஒரு டெஸ்ட் ரத்தானது.மழை வருமா

கிறைஸ்ட்சர்ச்சில் இன்று காலை மழை வர 30 சதவீதம் வாய்ப்புள்ளதால், போட்டி துவங்க தாமதம் ஆகலாம். அடுத்த மூன்று நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை.நம்பிக்கை உள்ளது

இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,''தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் போது தோல்வியின் ருசி தெரியாமல் மனம் இறுக்கமாக இருக்கும். நம்மை அசைத்துப் பார்ப்பது போன்ற தோல்வி தேவை. இது தான் முதல் டெஸ்டில் கிடைத்தது. இந்த தோல்வி, அதிகம் கற்றுக் கொள்ள உதவியது. நியூசிலாந்து என்ன திட்டத்துடன் செயல்பட்டது, இதை எப்படி சமாளிப்பது என தற்போது விளையாடலாம். இம்முறை எதிரணி சவால்களை இந்திய வீரர்கள் திறம்பட எதிர்கொள்வர் என நம்புகிறேன்,'' என்றார்.என்னாச்சு இஷாந்த்

ரஞ்சிகோப்பை போட்டியில் பங்கேற்ற போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதில் இருந்து மீண்ட இவர் முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். நேற்று மீண்டும் வலி ஏற்பட, பயிற்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார். முன்னெச்சரிக்கையாக 'ஸ்கேன்' எடுக்கப்பட்டது. இதன் முடிவுக்கு ஏற்ப இன்று களமிறங்குவது தெரியவரும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement