Advertisement

அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: 'டுவென்டி–20' உலக கோப்பையில் அசத்தல்

மெல்போர்ன்: பெண்கள் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியது இந்தியா. நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. மெல்போர்னில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

ஷபாலி அபாரம்: இந்திய அணிக்கு மந்தனா (11) ஏமாற்றினார். ரோஸ்மேரி பந்துவீச்சில் தானியா (23), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (10) விரைவில் திரும்ப, 'மிடில் ஆர்டர்' ஆட்டம் கண்டது. கேப்டன் ஹர்மன்பிரீத் (1), வேதா (6) ஒற்றை இலக்கில் அவுட்டாகினர். ஷபாலி வர்மா (46) நம்பிக்கை அளித்தார். இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே (10) அவுட்டாகாமல் இருந்தார்.

ஷிகா அசத்தல்: நியூசிலாந்து அணிக்கு பிரைஸ்ட் (12), கேப்டன் சோபி டிவைன் (14) ஏமாற்றினர்.சுஜீ பேட்ஸ்6 ரன்கள் மட்டும் எடுத்தார். மேடி கிரீன் (24) கைவிட்டார். கடைசி நேரத்தில் கேட்டி, அமேலியா கெர் இணைந்து நெருக்கடி தந்தனர். ராதா யாதவ் 'சுழலில்' கேட்டி (25) ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.

கடைசி 2 ஓவரில் 34 ரன் தேவைப்பட்டன. பூனம் வீசிய 19வது ஓவரில் 'ஆல் ரவுண்டர்' கெர், 4 பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாச, திடீரென 'டென்ஷன்' ஏற்பட்டது.

ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் ஐந்து பந்துகளில் 11 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 5 ரன் தேவை என்ற நிலையில், இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்ட ஜென்சன் (11) ரன் அவுட்டானார்.

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 130 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. கெர் (34 ரன், 19 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, வங்கதேசம் தற்போது நியூசிலாந்தை சாய்த்த இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது. 'ஏ' பிரிவில் 6 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.



நான்காவது முறை

பெண்கள் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி நான்காவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதற்கு முன் 2009, 2010, 2018 தொடர்களில் அரையிறுதியுடன் திரும்பியது.

சேவக் பாராட்டு

இந்திய முன்னாள் வீரர் சேவக் கூறுகையில்,''பதட்டமான சூழலிலும் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது சிறப்பானது. 'ராக்ஸ்டார்' ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடுகிறார்,'' என்றார்.

லட்சுமண் வாழ்த்து

முன்னாள் இந்திய வீரர் லட்சுமண் கூறுகையில்,''அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துக்கள். 132 ரன்கள் மட்டும் எடுத்த போதும், பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தது அபாரம்,'' என்றார்.

ஒன்பது போட்டி

சர்வதேச 'டுவென்டி-20'ல் இந்திய அணி 130 ரன்னுக்கும் அதிகமாக எடுத்த 9 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு, அனைத்திலும் வெற்றி பெற்றது.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement