Advertisement

அமித் பங்கல் 'நம்பர்–1': உலக குத்துச்சண்டை தரவரிசையில்

புதுடில்லி: உலக குத்துச்சண்டை தரவரிசையில் இந்திய வீரர் அமித் பங்கல் (52 கி.கி.,) 'நம்பர்-1' இடம் பிடித்தார்.

குத்துச்சண்டை போட்டியில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.,) குத்துச்சண்டை பணிக்குழு வெளியிட்டது. இதில் ஆண்களுக்கான 52 கி.கி., எடைப்பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அமித் பங்கல், 420 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 11 ஆண்டுகளுக்கு பின், உலக குத்துச்சண்டை தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியரானார். கடைசியாக 2009ல் இந்தியாவின் விஜேந்தர் சிங் (75 கி.கி.,) முதலிடம் பிடித்திருந்தார்.

ஆண்களுக்கான 57 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் கவிந்தர் சிங் பிஷ்ட், கவுரவ் பிதுரி முறையே 7, 32வது இடத்தை தட்டிச் சென்றனர். ஆண்களுக்கான 63 கி.கி., எடைப்பிரிவில் மணிஷ் கவுசிக், ஷிவா தபா முறையே 12, 36வது இடத்தை கைப்பற்றினர்.

பெண்களுக்கான 51 கி.கி., எடைப் பிரிவில், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம் (225 புள்ளி), நிகாத் ஜரீன் (75 புள்ளி) முறையே 5, 22வது இடத்தை பிடித்தனர்.

மற்ற இந்திய வீராங்கனைகளான லவ்லினா (69 கி.கி.,), சோனியா (57 கி.கி.,) முறையே 3, 10வது இடத்தை கைப்பற்றினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement