Advertisement

நேபாள வீராங்கனை உலக சாதனை

பொகாரா: மாலத்தீவு அணிக்கு எதிரான 'டுவென்டி-20' போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த், 6 விக்கெட் கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

நேபாளத்தில், 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கான 'டுவென்டி-20' போட்டியில் நேபாளம், மாலத்தீவு அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' செய்த மாலத்தீவு அணி 10.1 ஓவரில் 16 ரன்னுக்கு சுருண்டது. ஹம்சா நியாஜ் (9), ஹப்சா அப்துல்லா (4) மட்டும் ரன் எடுத்தனர். மற்ற 8 வீராங்கனைகள் 'டக்-அவுட்' ஆகினர். அய்மா ஆயிஷாத் (0, 12 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். நேபாளம் சார்பில் அஞ்சலி சந்த், 'ஹாட்ரிக்' உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார்.

சுலப இலக்கை விரட்டிய நேபாளம் அணி, முதல் ஓவரின் முதல் 5 பந்தில் 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காஜல் ஸ்ரேஸ்தா (13), சீதா ராணா மாகர் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

புதிய சாதனை

பவுலிங்கில் அசத்திய அஞ்சலி சந்த், 2.1 ஓவரில், ஒரு ரன் கூட வழங்காமல் 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் பெண்களுக்கான சர்வதேச 'டுவென்டி-20' அரங்கில், ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன், இந்த ஆண்டு ஜனவரியில் பாங்காக்கில் நடந்த சீனாவுக்கு எதிரான போட்டியில் மாலத்தீவு வீராங்கனை மாஸ் எலிசா, 4 ஓவரில், 3 ரன் வழங்கி, 6 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருந்தது.

தவிர, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எந்த ஒரு பவுலரும் ஒரு ரன் கூட வழங்காமல் 6 விக்கெட் கைப்பற்றியதில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement