Advertisement

கோப்பை வென்றது ஆஸ்திரேலியா: பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி

அடிலெய்டு: பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2-0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 589/3 ('டிக்ளேர்'), பாகிஸ்தான் 302 ரன்கள் எடுத்தன. 'பாலோ-ஆன்' பெற்ற பாகிஸ்தான் அணி, 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 39 ரன் எடுத்திருந்தது. ஷான் மசூது (14), ஆசாத் ஷபிக் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

லியான் அசத்தல்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூது (68), ஆசாத் ஷபிக் (57) அரைசதம் கடந்தனர். நாதன் லியான் 'சுழலில்' இப்திகார் அகமது (27), யாசிர் ஷா (13), ஷஹீன் ஷா அப்ரிதி (1) சிக்கினர். முகமது ரிஸ்வான் (45) ஆறுதல் தந்தார். முகமது அபாஸ் (1) 'ரன்-அவுட்' ஆனார்.

இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. முகமது முசா (4) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் லியான் 5, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வென்றார்.

ஆறாவது வெற்றி

பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, பகலிரவு டெஸ்டில் தொடர்ச்சியாக 6வது வெற்றியை (2015, 2016ல் 2, 2017, 2019ல் 2) பதிவு செய்தது. தவிர இது, அடிலெய்டு மைதானத்தில் 4வது பகலிரவு டெஸ்ட் வெற்றி.

16வது முறை

சுழலில் அசத்திய ஆஸ்திரேலியாவின் நாதன் லியான், டெஸ்ட் அரங்கில் 16வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றினார். இது, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறை.

14வது தோல்வி

அடிலெய்டில் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக 14வது டெஸ்ட் தோல்வியை பெற்றது.

* பகலிரவு டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது முறையாக தோல்வியடைந்தது. இதற்கு முன், 2016ல் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement