துபாய்: உலக 'பாரா' தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ('எப்-46') மீண்டும் தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் அஜீத் சிங் வெண்கலம் கைப்பற்றினார்.
துபாயில், மாற்றுத் திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எப்-46' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 61.22 மீ., துாரம் எறித்த இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் 23, முதலிடம் பிடித்து தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்றார். இவர், 2017ல் லண்டனில் நடந்த உலக 'பாரா' தடகளத்தில் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் இவர், உலக 'பாரா' தடகளத்தில் தொடர்ச்சியாக 2 முறை பதக்கம் வென்ற 2வது இந்தியரானார். ஏற்கனவே இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா, 2013 (தங்கம்), 2015ல் (வெள்ளி) பதக்கம் வென்றிருந்தார்.
பாராலிம்பிக் வாய்ப்பு: இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் அஜீத் சிங் (59.46 மீ.,) 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் ரிங்கு (57.59 மீ.,) 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்ல தவறினார். வெள்ளி பதக்கத்தை இலங்கையின் ஹெராத் (60.59 மீ.,) கைப்பற்றினார்.
சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (ஐ.பி.சி.,) விதிமுறைப்படி பைனலில் முதல் 4 இடங்களை பிடித்த சுந்தர் சிங், ஹெராத், அஜீத் சிங், ரிங்கு ஆகியோர் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள 'பாராலிம்பிக்' போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சுந்தர் சிங் மீண்டும் தங்கம்: உலக 'பாரா' தடகளத்தில் கலக்கல்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!