Advertisement

சென்னை அணி கற்றுத்தந்த பாடம்: தீபக் சகார் பெருமிதம்

நாக்பூர்: ''பகலிரவு போட்டியில் பனிப் பொழிவை எப்படி சமாளிப்பது என்பதை ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது கற்றுக் கொண்டேன்,'' என, இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சகார் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 3வது 'டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 'வேகத்தில்' மிரட்டிய இந்தியாவின் தீபக் சகார் (3.2 ஓவர், 7 ரன், 6 விக்.,), 'ஹாட்ரிக்' உட்பட 6 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில், 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் இந்திய பவுலர் என்ற புதிய வரலாறு படைத்தார். தவிர இவர், ஒரு இன்னிங்சில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்கள் பட்டியலில் இலங்கையின் அஜந்தா மெண்டிசை (4 ஓவர், 8 ரன், 6 விக்., எதிர்: ஜிம்பாப்வே, 2012) முந்தி முதலிடம் பிடித்தார்.

இதுகுறித்து தீபக் சகார் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய போது பகலிரவு போட்டியில் பனிப் பொழிவு மற்றும் வியர்வையை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக் கொண்டேன். எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருப்பேன். இதற்காக காய்ந்த மண்னை அடிக்கடி கையில் தேய்த்துக் கொள்வேன். இதனால் பவுலிங் செய்யும் போது, பந்து கைகளை விட்டு நழுவாமல் இறுக்கமாக பிடித்து வீச முடியும்.

நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் 'லெக்சைடு' மற்றும் 'ஆப்சைடு' பகுதி நீண்ட துாரம் என்பதால் பவுண்டரி அடிப்பது கடினம். இதனால் இப்பகுதிகளில் மாறி, மாறி பந்துவீச திட்டமிட்டேன். இதற்கேற்ப வேகத்தை குறைத்து பந்தை 'சுவிங்' செய்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

போட்டி முடிந்த பின் தான் 'ஹாட்ரிக்' சாதனை படைத்தது தெரிய வந்தது. வீட்டில் அமர்ந்து கொண்டு கனவு கண்டால் கூட 3.2 ஓவரில் 7 ரன் வழங்கி, 6 விக்கெட் வீழ்த்தி இருக்க முடியாது. இன்னும் கடினமாக உழைக்க விரும்புகிறேன். கடவுளின் உதவியால் தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன். புதிய பந்தில் பந்துவீச வாய்ப்பு வழங்கிய அணி நிர்வாகத்திற்கும், கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தீபக் சகார் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement