Advertisement

இந்தியாவில் உலக கோப்பை ஹாக்கி: வரும் 2023ல் நடத்த அனுமதி

லாசன்னே: வரும் 2023ல் ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் ஆண்களுக்கான 15வது உலக கோப்பை தொடர் வரும் 2023, ஜன. 13-29ல் நடக்க உள்ளது. இத்தொடரை நடத்த இந்தியா, பெல்ஜியம், ஜெர்மனி, மலேசியா, ஸ்பெயின் நாடுகள் விருப்பம் தெரிவித்தன. பின் ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகள் விலகிக் கொண்டன. முடிவில் இந்தியாவுக்கு தொடரை நடத்தும் உரிமை வழங்கப்பட்டது. போட்டி நடக்கும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். இதனையடுத்து இந்திய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. கடந்த 2018ல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்தது.

தவிர இந்திய மண்ணில் 4வது முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதற்கு முன் 1982 (மும்பை), 2010 (புதுடில்லி), 2018ல் (புவனேஸ்வர்) நடந்தன. இதன்மூலம் அதிக முறை இத்தொடரை நடத்தும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது. ஏற்கனவே நெதர்லாந்து 3 முறை (1973, 1990, 1998) இத்தொடரை நடத்தி உள்ளது.

வரும் 2023ல், 75 ஆண்டு சுதந்திரத்தை இந்தியா நிறைவு செய்யும். எனவே இச்சந்தர்ப்பத்தில் ஹாக்கியின் வளர்ச்சியை காண்பிப்பதற்காக உலக கோப்பை தொடரை நடத்த ஹாக்கி இந்தியா (ஹெச்.ஐ.,) விரும்பியது.

ஆண்களுக்கான உலக கோப்பை (2018) தொடர் தவிர்த்து இதுவரை இந்திய மண்ணில் சாம்பியன்ஸ் டிராபி (2014), ஆண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை (2016), உலக லீக் பைனல் (2017), ஆண்களுக்கான சீரிஸ் பைனல்ஸ் (2019), டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச் சுற்று (2019) போன்ற மிகப் பெரிய ஹாக்கி தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன.

போட்டிகள் வரும் 2018ல் நடந்தது போல நடத்தப்படும்.

பெண்கள் உலக கோப்பை

வரும் 2022ல் (ஜூலை 1-17) பெண்களுக்கான 15வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கவுள்ளது. இதனை நடத்த ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா, நியூசிலாந்து நாடுகள் விருப்பம் தெரிவித்தன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா விலகிக் கொண்டன. முடிவில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்து நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement