Advertisement

பிந்த்ரா மீது மேரி கோம் பாய்ச்சல்

புதுடில்லி: ''குத்துச்சண்டையில் உள்ள விதிகள் பற்றி துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு தெரியாது. இது குறித்த விவகாரத்தில் இவர் தலையிடாமல் இருப்பதே நல்லது,'' என, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்தார்.

உலக குத்துச்சண்டையில் 8 பதக்கம் (6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) வென்ற ஒரே நட்சத்திரம் மேரி கோம், 36. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதிக்கும் முனைப்பில் உள்ளார். சீனாவில் நடக்கவுள்ள இதற்கான, தகுதிச்சுற்றிற்கு (பிப்., 2020) நேரடியாக மேரி கோமை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சக வீராங்கனை நிகாத் ஜரீன் தன்னுடன் மேரி கோம் மோத வேண்டும் என வலியுறுத்தினார். இது குறித்து, விளையாட்டுத்துறை அமைச்சகமும் தலையிட மறுத்துவிட்டது. ஆனால், இந்தியாவின் 'தங்கமகன்' அபினவ் பிந்த்ரா, ஜரீனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேரி கோம் தகுதிச்சுற்றில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

விதிகள் தெரியுமா

இது குறித்து மேரி கோம் கூறுகையில்,'' இந்திய துப்பாக்கி சுடுதல் முன்னாள் வீரர் அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கலாம். நான் உலக சாம்பியன்ஷிப்பில் பல தங்கங்கள் கைப்பற்றி உள்ளேன். குத்துச்சண்டையில் தலையிடுவது இவரது வேலை இல்லை. குத்துச்சண்டையில் உள்ள விதிகள் பற்றி பிந்த்ராவுக்கு தெரியாது. இப்படிப்பட்ட விவகாரத்திலிருந்து இவர் தலையிடாமல் இருப்பதே நல்லது. நான் எப்போதும் துப்பாக்கி சுடுதல் குறித்து கருத்து கூறவில்லை. தவிர, ஒவ்வொரு துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு முன்பும், பிந்த்ரா தகுதிச்சுற்றில் பங்கேற்றாரா என்பதும் தெரியவில்லை,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement