Advertisement

'உறங்கும் மிருகம்' விழித்தது * கால்பந்து அரங்கில் இந்தியா அபாரம்

தோகா: 'இந்தியாவில் கால்பந்து மிருகம் உறங்குகிறது' என 'பிபா' முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் தெரிவித்தார். தற்போது இது விழித்துள்ளது. உலக கால்பந்து அரங்கில் இந்தியா எழுச்சி பெற்றுள்ளது. கத்தாரை அதன் சொந்த மண்ணில் கதறடித்து, 'டிரா' செய்தது.

உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் வலிமையான கத்தாருக்கு எதிரான போட்டியை இந்திய அணி 'டிரா' செய்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் (2022) நடக்கவுள்ளது. ஆசிய பிரிவு 2வது கட்ட தகுதிச்சுற்றில் 40 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இந்திய அணி, 'இ' பிரிவில் வங்கதேசம், ஓமன், ஆப்கானிஸ்தான், கத்தாருடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் ஓமனுக்கு எதிராக 82வது நிமிடம் வரை முன்னிலையில் இருந்த இந்தியா, கடைசி நேரத்தில் ஏமாற்ற 1-2 என தோற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா (103 வது இடம்), வலிமையான கத்தாரை ('நம்பர்-62'), அதன் சொந்த மண்ணில் சந்தித்தது.

கடந்த 15 ஆண்டுகளாக கால்பந்து அரங்கில் வியக்கத்தக்க அணியாக வந்துள்ளது கத்தார். 'ஆசிய சாம்பியன்' ஆன இந்த அணி, கோபா அமெரிக்க தொடரில் பராகுவேக்கு எதிராக 2 கோல் அடித்து அசத்தியது.

செத்ரி இல்லை

காய்ச்சல் காரணமாக கேப்டன் சுனில் செத்ரி, காயம் காரணமாக தாக்குதல் வீரர் ஆஷிக் பங்கேற்கவில்லை. கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சாந்து இந்திய அணி கேப்டன் பொறுப்பேற்றார். கத்தார் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 6-0 என வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கியது. துவக்கத்தில் இருந்தே கத்தார் வீரர்கள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். ஒவ்வொன்றையும் துணிச்சலாக எதிர்கொண்டார் குர்பிரீத் சிங்.

முதல் பாதியில் கத்தார் வீரர்கள் எடுத்த 14 கோல் வாய்ப்புகளையும் தடுத்து இந்திய அணிக்கு அரணாக நின்றார்.

மீண்டும் மிரட்டல்

இரண்டாவது பாதியிலும் குர்பிரீத்சிங் ஜொலித்தார். இம்முறை 13 வாய்ப்புகளையும் தடுக்க, கத்தார் வீரர்கள் சோர்ந்து போயினர். சந்தேஷ் ஜின்கன், அடில் கான் கூட்டணியும் இந்தியாவுக்கு சற்று கைகொடுத்தது. இந்திய தரப்பில் அப்துல் சமாஜ், உடாண்டா என இருவர் மட்டும் இரு முறை கோல் அடிக்க முயற்சித்தனர்.

மற்றபடி, 90 நிமிடத்தில் எதிரணியின் 27 கோல் வாய்ப்புகளையும் 'பெருஞ்சுவராக' நின்று தவிடு பொடியாக்கினார் குர்பிரீத்சிங். கடைசியில் போட்டி கோல் எதுமின்றி ('0-0') 'டிரா' ஆன போதும், இந்திய வீரர்கள், ரசிகர்களின் மனம் கவர்ந்தனர். இந்திய கால்பந்துக்கும் இது மறக்க முடியாத போட்டியாக அமைந்தது.மகிழ்ச்சி

இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் கூறுகையில்,''ஆசிய சாம்பியன் கத்தாருக்கு எதிரான போட்டியில் 'டிரா' செய்து 1 புள்ளி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது சிறந்த அனுபவம். அனைத்து பாராட்டுகளும் வீரர்களையே சேரும்,'' என்றார்.எனது வீரர்கள்

கேப்டன் சுனில் செத்ரி கூறுகையில்,''இது எனது அணி, இவர்கள் எனது வீரர்கள், 'டிரா' செய்த தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இது பெரிய வெற்றி அல்ல என்றாலும் நமது வீரர்கள் பெரியளவில் போராடினர். அனைவருக்கும் பாராட்டுகள்,'' என்றார்.கொண்டாட்டம்

காத்தாருக்கு எதிரான போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் ரசிகர்கள் இருக்கும் பகுதியை நோக்கிச் சென்றனர். அனைவரும் வரிசையாக நின்று குரல் எழுப்பி, கைதட்டி ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.பெரிய சாதனை

முன்னாள் கேப்டன் பாய்ச்சங் பூட்டியா கூறுகையில்,''ஆசிய சாம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் 'டிரா' செய்தது என்பது மிகப்பெரிய சாதனை. இது அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட இந்திய அணி வீரர்களுக்கு நம்பிக்கை, மன உறுதியை தரும்,'' என்றார்.'சூப்பர் மேன்' குர்பிரீத்

கத்தாருக்கு எதிரான போட்டியில் வலது, இடது மற்றும் அந்தரத்தில் என பறந்து, பறந்து எதிரணி கோல்வாய்ப்புகளை தடுத்தார் 'சூப்பர் மேன்' குர்பிரீத்சிங் சாந்து 27. பஞ்சாப்பை சேர்ந்த இவர் கூறுகையில்,''இந்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இது ஒட்டுமொத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Mahe - Theni,இந்தியா


    வாழ்த்துக்கள்

  • MANOHARAN B - COIMBATORE,இந்தியா


    வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement