Advertisement

கெய்ல் சாதனை மழை...

301

அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். இவர், 301 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் லாரா (299 போட்டி), சந்தர்பால் (268) உள்ளனர்.

10,480

ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முன்னிலையில் உள்ளார். இவர், 301 போட்டியில், 25 சதம், 54 அரைசதம் உட்பட 10,480 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் முறையே லாரா (10,405 ரன்கள், 299 போட்டி), சந்தர்பால் (8,778 ரன்கள், 268 போட்டி) உள்ளனர்.

215

ஒருநாள் போட்டி அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2015ல் கான்பெராவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் அசத்திய இவர், 147 பந்தில், 16 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 215 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதமடித்த முதல் விண்டீஸ் வீரரானார். தவிர, உலக கோப்பை அரங்கில் இரட்டை சதமடித்த முதல் சர்வதேச வீரரானார்.

இதற்கு முன், விவியன் ரிச்சர்ட்ஸ் 189 ரன்கள் (எதிர்: இங்கிலாந்து, 1984, இடம்: மான்செஸ்டர்) எடுத்திருந்தது, ஒரு இன்னிங்சில் விண்டீஸ் வீரரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

331

ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் முன்னிலை வகிக்கிறார். இவர், 301 போட்டியில், 331 சிக்சர் பறக்கவிட்டார். அடுத்த இடத்தில் லாரா (133+ சிக்சர்) உள்ளார்.

தவிர, அதிக சிக்சர் விளாசிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார் கெய்ல். முதலிடத்தில் பாகிஸ்தானின் அப்ரிதி (351 சிக்சர்) உள்ளார்.

16

ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கெய்ல். இவர், 2015ல் கான்பெராவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 16 சிக்சர் பறக்கவிட்டார். தவிர இவர், இம்மைல்கல்லை எட்டிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை இந்தியாவின் ரோகித் சர்மா (16 சிக்சர்), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (16) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் இயான் மார்கன் (17 சிக்சர், எதிர்: ஆப்கானிஸ்தான், இடம்: மான்செஸ்டர், 2019) உள்ளார்.

25

ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார் கெய்ல். இவர், 301 போட்டியில், 25 சதமடித்துள்ளார். இவரை அடுத்து லாரா (19 சதம்) உள்ளார். தவிர அதிக சதமடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தை டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சங்ககரா (இலங்கை) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) உள்ளார்.

19,321

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து விடை பெற்ற விண்டீசின் கிறிஸ் கெய்ல், 103 டெஸ்ட் (7,214 ரன்), 301 ஒருநாள் (10,480 ரன்), 58 சர்வதேச 'டுவென்டி-20' (1627 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர், சர்வதேச அரங்கில் (டெஸ்ட்+ஒருநாள்+சர்வதேச 'டுவென்டி-20') 462 போட்டிகளில், 19,321 ரன்கள் (42 சதம், 104 அரைசதம்) எடுத்துள்ளார்.

* தவிர டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச 'டுவென்டி-20' என, மூன்று வித போட்டிகளிலும் சதமடித்த முதல் வீரர் கெய்ல் தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement