Advertisement

அருண் கார்த்திக் அரைசதம்: மதுரை அணி வெற்றி

திண்டுக்கல்: துாத்துக்குடி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் கேப்டன் அருண் கார்த்திக் அரைசதம் கடந்து கைகொடுக்க, மதுரை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மதுரை, துாத்துக்குடி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற துாத்துக்குடி அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.

சீனிவாசன் அரைசதம்: துாத்துக்குடி அணிக்கு வில்கின்ஸ் விக்டர் (1) ஏமாற்றினார். அடுத்து வந்த கேப்டன் சுப்ரமணிய சிவா, ஜெகதீசன் கவுசிக் வீசிய 5வது ஓவரில், 2 பவுண்டரி, 2 சிக்சர் விளாசினார். லோகேஷ் ராஜ் வீசிய 7வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் பறக்கவிட்ட அக்சய் சீனிவாசன், ஆகாஷ் சும்ரா பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது மிதுன் பந்தில் சுப்ரமணிய சிவா (28) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சீனிவாசன், 34 பந்தில் அரைசதமடித்தார்.

மிதுன் அபாரம்: மிதுன் பந்தில் அபிஷேக் (4) அவுட்டானார். ராகில் ஷா பந்தில் சுபம் மேத்தா 'டக்-அவுட்' ஆனார். தொடர்ந்து அசத்திய மிதுன் 'சுழலில்' சீனிவாசன் (55) சிக்கினார். ஆட்டத்தின் 17வது ஓவரில் கார்த்திகேயன் (4), வசந்த் சரவணன் (11) ஆகியோரை அவுட்டாக்கிய கிரண் ஆகாஷ், 19வது ஓவரில் கணேஷ் மூர்த்தியை (2) வெளியேற்றினார்.

துாத்துக்குடி அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. பூபாலன் (2), சத்ய ராஜ் (9) அவுட்டாகாமல் இருந்தனர். மதுரை அணி சார்பில் கிரண் ஆகாஷ், மிதுன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.



அருண் அசத்தல்: சுலப இலக்கை விரட்டிய மதுரை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக், சரத் ராஜ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கணேஷ் மூர்த்தி வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்சர் விளாசினார் சரத் ராஜ். குமரன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அருண் கார்த்திக், சரவணன் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்சர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது கணேஷ் மூர்த்தி பந்தில் சரத் ராஜ் (33) அவுட்டானார். கார்த்திகேயன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய அருண் கார்த்திக், 33 பந்தில் அரைசதமடித்தார். சீனிவாசன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அருண் கார்த்திக், கார்த்திகேயன் பந்தை பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார்.

மதுரை அணி 12.2 ஓவரில், ஒரு விக்கெட்டுக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அருண் கார்த்திக் (65), நிலேஷ் சுப்ரமணியன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement