Advertisement

இந்திய அணி இன்று தேர்வு * புதுமுகங்களுக்கு இடம் கிடைக்குமா

மும்பை: விண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. கேப்டன் கோஹ்லி தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

விண்டீஸ் செல்ல உள்ள இந்திய அணி தலா மூன்று 'டுவென்டி-20', மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. முதல் இரு போட்டிகள் (ஆக. 3, 4) அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடக்கிறது.

தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கேப்டன் கோஹ்லி பங்கேற்கிறார்.

ஓய்வு யாருக்கு

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு அணியை தயார் செய்யும் வகையில் தோனிக்குப் பதில் இளம் வீரர் ரிஷாப் பன்ட் இடம் பெறுவார்.

கோஹ்லி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, 'ஆல் ரவுண்டர்' பாண்ட்யா உள்ளிட்ட 'சீனியர்' வீரர்களுக்கு, 'டுவென்டி-20', ஒருநாள் தொடர்களில் 'ரெஸ்ட்' தரப்படும் எனத் தெரிகிறது.

ஒருவேளை கோஹ்லி ஓய்வு எடுத்தால், கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம். காயத்தில் இருந்து மீளாத துவக்க வீரர்கள் ஷிகர் தவான், பிரித்வி ஷா இருவரும் பெங்களூரு தேசிய அகாடமியில் உள்ளதால் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை. மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரலாம்.

புதுமுக வாய்ப்பு

ஆக. 22ல் துவங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு கோஹ்லி, பும்ரா அடங்கிய முழுமையான இந்திய அணி செல்லும் என நம்பப்படுகிறது. இதனால், தற்போது விண்டீசில், இந்திய 'ஏ' அணிக்காக விளையாடி வரும் நவ்தீப் சைனி, கலில் அகமது, குர்னால் பாண்ட்யா, மணிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் உள்ளிட்டோர் தேர்வு பெறலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement