Advertisement

'அடிச்சு துாக்கிய' அனிருதா: 'சூப்பர் ஓவரில்' காரைக்குடி வெற்றி

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அனிருதா ஸ்ரீகாந்த் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாச, காரைக்குடி அணி 'சூப்பர் ஓவர்' முறையில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) தொடரின் 4வது சீசன் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் காரைக்குடி, திருச்சி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது.

அனிருதா அசத்தல்

காரைக்குடி அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. விக்னேஷ் பந்தில் ஆதித்யா (1) அவுட்டானார். சூர்யபிரகாஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், இணைந்த கேப்டன் அனிருதா ஸ்ரீகாந்த, சீனிவாசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. அப்பா ஸ்ரீகாந்த் போல அதிரடியாக ஆடிய அனிருதா அரைசதம் கடந்தார். இவர், ௫௮ ரன்னில் சாய் கிஷோர் 'சுழலில்' போல்டானார். சரவணன் குமாரின் ஒரே ஓவரில் பாப்னா (30), ஷாஜகான் (1) சிக்கினர். கடைசி கட்டத்தில் ராஜ்குமார் அதிரடி காட்ட, காரைக்குடி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. சீனிவாசன் (37), ராஜ்குமார் (28) அவுட்டாகாமல் இருந்தனர்.

விஜய் விளாசல்

திருச்சி அணிக்கு அரவிந்த் (13), ஆதித்யா (16) ஏமாற்றினர். ராகவ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராஜ்குமாரின் 15வது ஓவரில் இவர் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். விஜய் அரை சதம் கடந்தார். ஷாம் பந்துவீச்சில் விஜய் (81), கணபதி (21) சிக்கினர். ராஜ்குமார் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. மணி பாரதி சிக்சர் பறக்கவிட, அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. திருச்சி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. இரு அணிகளும் ஒரே 'ஸ்கோரை' எட்ட, போட்டி 'டை' ஆனது. இதனையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி 'சூப்பர் ஓவருக்கு' சென்றது.

'சூப்பர் ஓவர்'

'சூப்பர் ஓவரில்' திருச்சி அணிக்கு முரளி விஜய், கணபதி பேட்டிங் செய்தனர். ஷாம் பந்துவீசினார். கணபதி 'டக்' அவுட்டானார். விஜய் (8) சிக்சர் விளாச, திருச்சி அணி 2 விக்கெட்டையும் இழந்து 11 ரன்கள் எடுத்தது. பின் காரைக்குடி அணிக்கு ராஜ்குமார், அனிருதா பேட்டிங் செய்தனர். அனிருதா தொடர்ந்து இரண்டு சிக்சர் பறக்கவிட, காரைக்குடி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

............



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement