Advertisement

எதிரணிகளை கலங்கடிக்கும் இந்தியா: ஸ்ரீகாந்த் புகழாரம்

மான்செஸ்டர்: ''விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி போல எதிரணிகளை கதிகலங்க வைக்கிறது,'' என, முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில், ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, 2வது போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மான்செஸ்டரில் நடந்த 4வது போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணிக்கு ரோகித் சர்மா (140), கேப்டன் கோஹ்லி (77), லோகேஷ் ராகுல் (57) கைகொடுக்க, 50 ஓவரில் 336/5 ரன்கள் குவித்தது. பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவரில், 212/6 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனையடுத்து 89 ரன் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி வெற்றி பெற்ற இந்தியா, உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது.

அந்த நாள் ஞாபகம் வந்ததே..." முன்னாள் இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியது: கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை பார்க்கையில், 1970களில் துடிப்பாகவும், ஆவேசத்துடனும் செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தியா என்ற பேரை கேட்டவுடன் எதிரணியினர் மனரீதியாக பாதிப்படைகின்றனர். இந்தியாவுக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறோம் என, அச்சப்படுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை பாராட்டுகின்றனர். இவர், சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை லோகேஷ் ராகுலின் 'பேட்டிங்' தான் முக்கியமாக பார்க்க வேண்டியதாக இருந்தது. ஏனெனில் ஷிகர் தவான் இல்லாத நிலையில் இவர் எப்படி துவக்கம் தரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சிறப்பாக விளையாடிய இவர், ரோகித் சர்மாவுடன் இணைந்து நல்ல துவக்கம் தந்தார்.

வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயமடைந்திருப்பது பின்னடைவு. இருப்பினும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக 'ஆல்-ரவுண்டர்' விஜய் சங்கர் சாதிப்பார் என நம்புகிறேன்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

சர்பராஸ் குழப்பம்: சச்சின்

இந்திய ஜாம்பவான் சச்சின் கூறுகையில், ''இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது குழப்பத்துடன் இருந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் 'பீல்டிங்' வியூகம் வகுப்பதில் தடுமாறினார். வகாப் ரியாஸ் பந்துவீசும் போது 'ஷார்ட் மிட் விக்கெட்' பகுதியிலும், ஷதாப் கான் பவுலிங் செய்கையில் 'சிலிப்' பகுதியிலும் தவறாக 'பீல்டர்களை' நிறுத்தினார். முக்கியமான போட்டிகளில் இப்படி செயல்பட்டால் வெற்றி பெறுவது கடினம். தவிர, பாகிஸ்தான் வீரர்கள் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவில்லை,'' என்றார்.

வெங்சர்க்கார் பாராட்டு

முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் கூறுகையில், ''பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா விளையாடிய விதம் அவரது பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. ஷிகர் தவான் இல்லாத நிலையில் பொறுப்பாக விளையாடிய இவர், பந்துகளை தேர்வு செய்து 'ஷாட்' அடித்த விதம் பாராட்டுக்குரியது. பொதுவாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. துவக்கத்தில் இருந்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியதால், பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகமாயிற்று. ரோகித், தவான், கோஹ்லி, ராகுல் ஆகியோரது 'பார்ம்' இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement