Advertisement

பயிற்சியில் அசத்துமா இந்தியா: இன்று நியூசி.,யுடன் மோதல்

லண்டன்: உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ல் துவங்குகிறது. இதில் இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி மூன்றாவது முறையாக உலக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது முதல் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை ஜூன் 5ல் சவுத்தாம்ப்டனில் சந்திக்கிறது.

தற்போது பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. இன்று லண்டனின் ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

மிரட்டும் கோஹ்லி

இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி நம்பிக்கை தருகிறது. ஐ.சி.சி., தொடர் என்றாலே, தவானுக்கு உற்சாகம் வந்துவிடும். இந்த விளாசல் மீண்டும் தொடரலாம். பிரிமியர் தொடரில் மும்பை அணிக்கு கோப்பை வென்று தந்த மகிழ்ச்சியில் ரோகித் உள்ளார்.

கேப்டன் விராத் கோஹ்லியின் 'பார்ம்' பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எப்படிப்பட்ட பந்துவீச்சையும் பாரபட்சம் இல்லாமல் விளாசுவார். இம்முறை உலக கோப்பை கைப்பற்றும் எண்ணத்துடன் களமிறங்கி உள்ளார்.

நான்காவது இடம்

நான்காவது இடத்திற்கான வீரர்கள் தேர்வில்தான் தடுமாற்றம் தொடர்கிறது. லோகேஷ் ராகுல், விஜய் சங்கர் இடையே போட்டி காணப்படுகிறது. கடந்த ஐந்து ஒருநாள் போட்டியில் ராகுல் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், சமீபத்திய பிரிமியர் தொடரில் அதிக ரன்கள் (14 போட்டி, 593 ரன்) குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். மறுபுறம், தமிழகத்தின் விஜய் சங்கர் இளம் நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இக்கட்டான நிலையிலும் அணிக்கு கைகொடுப்பார் என நம்பலாம். இன்றைய போட்டி நான்காவது இடத்திற்கான பிரச்னைக்கு தீர்வு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மிடில்-ஆர்டரில்' கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா ரன் குவிக்கலாம்.

ஒருநாள் அரங்கில், உலகின் 'நம்பர்-1' பவுலரான பும்ரா இருப்பது பலம். இவருடன் ஷமி, புவனேஷ்வர் கைகோர்த்தால் 'வேகத்தில்' அசத்தலாம். யுவேந்திர சகால், 'சைனாமேன்' பவுலர் குல்தீப் பந்தை 'சுழற்ற' தயார்.

நியூசி., எப்படி

நியூசிலாந்து அணியில் மார்டின் கப்டில், கோலின் முன்ரோ என விளாசல் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. கேன் வில்லியம்சனின் கேப்டன்ஷிப், ராஸ் டெய்லரின் அனுபவ ஆட்டம் அணிக்கு கைகொடுக்கும். கை விரலில் ஏற்பட்டுள்ள காயத்தால் டாம் லதாம் இன்று விளையாடமாட்டார். 'வேகத்தில்' டிரண்ட் பவுல்ட், டிம் சவுத்தீ, 'சுழலில்' சான்ட்னர், இஷ் சோதி சாதிக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement