Advertisement

கோஹ்லி மட்டும் போதுமா: ஆலோசனை சொல்கிறார் சச்சின்

புதுடில்லி: ''கோஹ்லியை பொறுத்தவரையில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது வழக்கம். ஆனால் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இவரால் மட்டும் உலக கோப்பையை வெல்ல முடியாது,'' என சச்சின் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ல் துவங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று லண்டன் கிளம்பிச் சென்றது. முதல் போட்டியில் வரும் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கூறியது:

பொதுவாக இந்திய அணியில் ஏதாவது ஓரிரு வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவர். ஆனால் சக வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில் பெரியளவு சாதிக்க முடியாது.

ஏனெனில் ஒரு வீரர் மட்டும் சிறப்பாக விளையாடினால், தொடரை வெல்ல முடியாது. இதற்கான வாய்ப்பே இல்லை. அதேநேரம் ஒவ்வொரு முக்கிய நேரத்திலும் மற்ற வீரர்கள் கைகொடுக்க வேண்டும். இது நடக்கவில்லை எனில் பெரும் ஏமாற்றமாகி விடும்.

பேட்டிங் ஆர்டரில் 4வது இடம் என்பது வெறும் எண் மட்டுமே. இதை 'அட்ஜஸ்ட்' செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் களமிறங்கி, சிறப்பாக செயல்பட இந்திய அணியில் போதுமான வீரர்கள் உள்ளனர். இதனால் 4 என்பது ஒரு பிரச்னையே அல்ல.

புரிதல் முக்கியம்: இந்திய வீரர்கள் அதிகமாக போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 4, 6 அல்லது 8 என எந்த ஆர்டரில் களமிறங்கினாலும், அந்த இடத்தில் என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்குத் தெரியும். சூழ்நிலையை புரிந்து கொள்வது தான் முக்கியம்.

ஆஸ்திரேலிய தொடரில் சகால், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. அவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தவறு செய்யாமல் இருந்தது கிடையாது. முரளிதரன் இப்படித் தான் சாதித்தார். இவரது பந்து வீச்சை எல்லோரும் கணித்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.

'சீனியர்-ஜூனியர்': இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் 8 முதல் 10 ஆண்டுகள் விளையாடிய அனுபவம் உடையவர்கள். தவிர குல்தீப், ராகுல், சகால், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என இளம் வீரர்களும் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக திறமை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக இந்திய அணி சமபலத்துடன் உள்ளது. இம்முறை உலக கோப்பை தொடரில் சாதிக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இவ்வாறு சச்சின் கூறினார்.

ஒரு பந்து முறை

சச்சின் கூறுகையில்,''ஒருநாள் அரங்கில் பேட்டிங் சாதகமான ஆடுகளங்களால் பவுலர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. ஒரு அணி 350 ரன்கள் எடுத்தால், எதிரணி 45 ஓவர்களில் 'சேஸ்' செய்கிறது. நாங்கள் விளையாடிய போது 28 ஓவருக்குப் பின், பந்துகள் 'ரிவர்ஸ் சுவிங்' ஆகும். கடைசி நேரத்தில் பந்து நன்கு தேய்ந்து நிறம் மாறிவிடும். இப்போது இரு முனனைகளிலும் புதிய பந்துகள் பயன்படுத்துவதால் 'ரிவர்ஸ் சுவிங்' காணாமல் போய்விட்டது. தற்போதுள்ள இரு பந்துகளுக்குப் பதில் ஒரு பந்து முறை கொண்டுவர வேண்டும்,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement