Advertisement

அசத்துவரா சிந்து, செய்னா

நானிங்: அணிகளுக்கு இடையிலான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இந்திய அணி சார்பில் சிந்து, செய்னா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் அசத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகளுக்கு இடையிலான 16வது சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர் சீனாவின் நானிங் பகுதியில் இன்று துவங்குகிறது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 31 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில், முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இந்திய அணியை பொறுத்தவரை, அதிகபட்சமாக 2011, 2017ல் காலிறுதி வரை முன்னேறியது.

லீ சாங் இல்லை

இம்முறை '1 டி' பிரிவில் பலம் வாய்ந்த சீனா, மலேசியாவுடன் இடம்பிடித்துள்ளது. இந்திய அணி 21ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் மலேசியாவை எதிர் கொள்கிறது. ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என மொத்தம் 5 பிரிவுகளில் நடக்கவுள்ளது. தரவரிசையில் இந்தியாவை (9வது இடம்), மலேசியா (8) முன்னிலையில் இருந்தாலும், கேன்சர் பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நட்சத்திர வீரர் லீ சாங் வெய் இல்லாதது பின்னடைவு. இவருக்குப்பதில் களமிறங்கும் லீ ஜி, இந்தியாவின் சமீர் வர்மா, ஸ்ரீகாந்த்திற்கு சவால் தருவாரா எனத்தெரியவில்லை.

செய்னா, சிந்து நம்பிக்கை

பெண்கள் ஒற்றையர் பிரிவில், உலக டூர் பைனல்சில் (2018) பட்டம் வென்ற சிந்து, இந்தோனேஷிய ஓபனில் (2019) கோப்பை வென்ற செய்னா மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சிராக் ஷெட்டி- சாட்விக்சாய்ராஜ் (ஆண்கள் இரட்டையர்), அஷ்வினி- சிராக் (கலப்பு இரட்டையர்) நம்பிக்கை தருகின்றனர்.

22ல் நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர் கொள்கிறது. இதுவரை 10 முறை கோப்பை வென்றுள்ள சீனாவை ('நம்பர்-2') சமாளிப்பது மிகப்பெரிய விஷயம்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement