Advertisement

இந்திய அணியின் அதிர்ஷ்டம் * பவுலர்களை பாராட்டும் டிராவிட்

புதுடில்லி: ''நமது பவுலர்கள் 'மிடில்' ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறன் பெற்றுள்ளனர். இது இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் தான்,'' என முன்னாள் கேப்டன் டிராவிட் தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி முதல் ஜூலை 14 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ல் தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் டிராவிட் கூறியது:

உலக கோப்பை தொடர் கடினமாக இருக்கப் போகிறது. ஒவ்வொரு அணியும் சிறப்பான முறையில் தயாராகி, கடும் சவால் கொடுக்க தயாராக இருக்கும். முடிந்தவரை கடைசி வரை போராட்டத்தை வெளிப்படுத்தும்.

இம்முறை ஒவ்வொரு போட்டியிலும் அதிகமான ரன்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் 'மிடில்' ஓவர்களில் பவுலர்கள் விக்கெட் வீழ்த்துவது மிக முக்கியம்.

இது அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்கும். இந்தியாவை பொறுத்தவரையில் இவ்விஷயத்தில் அதிர்ஷ்டக்கார அணி என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பும்ரா, குல்தீப் யாதவ், சகால் உள்ளிட்ட பவுலர்கள் 'மிடில்' ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் திறமை பெற்றவர்கள். இது எதிரணிகளை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்த நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நம்பிக்கை உள்ளது

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி பல்வேறு ஒருநாள் தொடர்களில் சாதித்து வந்துள்ளது. தற்போதைய உலகத் தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-2' ஆக உள்ளதே இதற்கு சரியான உதாரணம். இதனால் வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீது அதிக நம்பிக்கை காணப்படுகிறது. எப்படியும் அரையிறுதிக்கு முன்னேறுவர் எனத் தெரிகிறது. எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

வெகு விரைவில்...

டிராவிட் கூறுகையில்,''கோஹ்லி சிறந்த வீரராக முன்னேறி வருகிறார். சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் விளாசிய 49 சதங்களை யாரும் எட்ட முடியாது, இதற்கு நீண்ட ஆண்டுகள் ஆகலாம் என நினைத்தோம். தற்போது இந்த மைல்கல்லை கோஹ்லி (41) எட்ட இன்னும் 9 சதங்கள் தான் தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மண்ணில் முதன் முதலில் சென்ற போது ஏமாற்றினார். மாறாக அடுத்த முறை சென்ற போது சிறந்த வீரராக மாறினார்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement