புதுடில்லி: ''என் மீதான எவ்வித விமர்சனத்தையும் கண்டுகொள்வது இல்லை. வழக்கம்போல, ஐ.சி.சி., தொடரான உலக கோப்பையில் சாதிப்பேன் என நம்புகிறேன்,'' என்றார்.
பிரிமியர் கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டதால், ரசிகர்களின் பார்வை ஐ.சி.சி., உலக கோப்பை மீது திரும்பி உள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள துவக்க வீரர் தவான் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு முந்தைய சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்தவராக (2013-363 ரன், 2017- 338 ரன்) தவான் வலம் வந்தார்.
கடந்த உலக கோப்பை தொடரிலும் (2015-412 ரன்) அதிக ரன் குவித்த இந்திய வீரராக ஜொலித்தார். சமீபத்திய, 12வது பிரிமியர் கிரிக்கெட் சீசனிலும் 16 போட்டியில் 521 ரன்கள் (டில்லி அணி) குவித்தார். இந்த செயல்பாட்டை மீண்டும் இவர் வெளிப்படுத்த வேண்டுமென ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நெருக்கடி கிடையாது
இது குறித்து ஷிகர் தவான் கூறியது: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தொடர்களில் எனது செயல்பாடு குறித்து ரசிகர்கள் பெருமையுடன் விவாதிக்கின்றனர். எந்த தொடர் என்றாலும், 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பேன். இதே போலத்தான், ஐ.சி.சி., தொடர்களில் செயல்படுகிறேன். இந்த விளாசல், எதிர் வரும் உலக கோப்பையிலும் அரங்கேறும் என நம்புகிறேன். இதற்காக, என் மீதான நெருக்கடி அதிகரிக்கவில்லை. இப்படிப்பட்ட விஷயத்தை நான் மனதில் ஏற்றிக்கொள்ள மாட்டேன். ஒருவேளை, 5 முதல் 10 போட்டி வரை ஜொலிக்கவில்லை என்றாலும், எல்லாம் முடிந்தது என எண்ண மாட்டேன். எனது திறமையை நன்றாக அறிவேன்.
விமர்சனம் இருக்குமா
பேட்டிங்கில் செய்யும் தவறு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். இந்த விமர்சனங்கள் எனக்கு பாதிப்பை தர வாய்ப்பில்லை. விமர்சனம் செய்வது சிலரின் வேலை. அதை பொருட்படுத்த தேவை இல்லை. எதிர்மறையான எண்ணத்திற்கு எனது வாழ்வில் என்றும் இடம் கிடையாது. இவ்வாறு தவான் கூறினார்.
தவானுக்கு ராசியான ஐ.சி.சி., தொடர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!