Advertisement

ஆர்ச்சர் ஆச்சர்யம்....பராக் பரவசம்: கோல்கட்டாவை வென்றது ராஜஸ்தான்

கோல்கட்டா: கோல்கட்டாவுக்கு எதிரான பிரிமியர் தொடர் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் அரைசதம் வீணானது.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின. ராஜஸ்தான் அணியில் ஆஷ்டன் டர்னர், தவால் குல்கர்னி நீக்கப்பட்டு ஒஷேன் தாமஸ் (அறிமுகம்), வருண் ஆரோன் இடம் பிடித்தனர். கோல்கட்டா அணியில் கரியப்பா, ஹாரி குர்னிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா, கார்லஸ் பிராத்வைட் சேர்க்கப்பட்டனர். 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

அதிர்ச்சி துவக்கம்: கோல்கட்டா அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரின் 3வது பந்தில் கிறிஸ் லின் (0) போல்டானார். ஒஷேன் தாமஸ், ஆரோன் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த சுப்மன் கில் (14) நிலைக்கவில்லை. ஸ்ரேயாஸ் கோபால் 'சுழலில்' நிதிஷ் ராணா (21) சிக்கினார். அடுத்து வந்த சுனில் நரைன், கோபால் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி தனது ரன் கணக்கை துவக்கினார்.

கார்த்திக் நம்பிக்கை: பொறுப்பாக ஆடிய கேப்டன் தினேஷ் கார்த்திக், கோபால் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் நரைன், தன்பங்கிற்கு ஒரு சிக்சர் பறக்கவிட்டார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் கார்த்திக். இந்த ஓவரின் 3வது பந்தில் தேவையில்லாமல் 2வது ரன்னுக்கு ஓடிய நரைன் (11) 'ரன்-அவுட்' ஆனார். தொடர்ந்து அசத்திய கார்த்திக், ஆரோன் வீசிய 14வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டினார். உனத்கட் வீசிய 16வது ஓவரில் ரசல், கார்த்திக் தலா ஒரு சிக்சர் விளாசினர். அபாரமாக ஆடிய கார்த்திக், பிரிமியர் அரங்கில் தனது 18வது அரைசதமடித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் (14), ஒஷேன் தாமஸ் பந்தில் ஆட்டமிழந்தார். உனத்கட் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கார்லஸ் பிராத்வைட் (5), 2வது பந்தில் அவுட்டானார். இந்த ஓவரில் கார்த்திக், தன்பங்கிற்கு 2 பவுண்டரி அடித்தார். ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்ட கார்த்திக், உனத்கட் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.

கோல்கட்டா அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது. கார்த்திக் (97), ரிங்கு சிங் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் வருண் ஆரோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.



'சுழல்' ஆதிக்கம்: சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு அஜின்கியா ரகானே, சஞ்சு சாம்சன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பிரசித் கிருஷ்ணா, ரசல் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார் சாம்சன். மறுமுனையில் அசத்திய ரகானே, பிரித்வி ராஜ் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது நரைன் 'சுழலில்' ரகானே (34) வெளியேறினார். பியுஸ் சாவ்லா பந்தில் சாம்சன் (22) போல்டானார். நரைனிடம் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (2) சரணடைந்தார். சாவ்லா 'சுழலில்' பென் ஸ்டோக்ஸ் (11), ஸ்டூவர்ட் பின்னி (11) அவுட்டாகினர்.

ஆர்ச்சர் அபாரம்: ராணா வீசிய 15வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் கோபால் (18), பிரசித் கிருஷ்ணாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பிரசித் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ரியான் பராக் (47) நம்பிக்கை தந்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. பிரசித் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஆர்ச்சர் வெற்றியை உறுதி செய்தார்.

ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்ச்சர் (27) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார். கோல்கட்டா அணி தொடர்ச்சியாக 6வது தோல்வியை பெற்றது.



97 ரன்

அபாரமாக ஆடிய கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், 50 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 97 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் பிரிமியர் அரங்கில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார். இதற்கு முன், 2013ல் மும்பையில் நடந்த டில்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக 86 ரன்கள் எடுத்திருந்தது இவரது அதிகபட்சமாக இருந்தது.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement