Advertisement

மீண்டும் சாதிக்குமா சென்னை * இன்று மும்பையுடன் பலப்பரீட்சை

சென்னை: பிரிமியர் தொடரில் இன்று சென்னை, மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சொந்தமண்ணில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சென்னை, மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் மும்பை அணிக்கு பதிலடி தரலாம்.

இந்தியாவில் 12வது பிரிமியர் தொடர் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் தலா மூன்று முறை சாம்பியன் ஆன சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சென்னையை பொறுத்தவரை கேப்டன் தோனி தலைமையில் இதுவரை பங்கேற்ற 11 போட்டியில் 8ல் வெற்றி பெற்று (3 தோல்வி) 16 புள்ளியுடன் 'நம்பர்-1' அணியாக உள்ளது. தவிர 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.

சொந்தமண்ணில் இந்த சீசனில் பங்கேற்ற 5 போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. இன்று மும்பை அணிக்கு எதிராக வாட்சன், டுபிளசி ஜோடி மீண்டும் சிறப்பான துவக்கம் தரும் பட்சத்தில், கடந்த முறை அடைந்த தோல்விக்கு பதிலடி தரலாம்.

'மிடில் ஆர்டரில்' ரெய்னா (245 ரன்) கைகொடுத்தாலும், அம்பதி ராயுடு (213) ஒருநாள் போட்டிகளைப் போல அதிக பந்துகளை வீணடிக்கிறார். மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் 58 ரன்கள் எடுத்த கேதர் ஜாதவ், அடுத்த 7 போட்டியில் 48 ரன்கள் மட்டும் தான் எடுத்தார். உலக கோப்பைக்கு முன் இவர் அதிக ஸ்கோர் எடுத்தால் நல்லது.

கடந்த சீசனைப் போல மீண்டும் பேட்டிங்கில் நம்பிக்கை தருகிறார் தோனி. 10 போட்டியில் 314 ரன்கள் எடுத்த இவரது அசத்தல் இன்றும் தொடரும் எனத் தெரிகிறது.

சகார் நம்பிக்கை

பவுலிங்கில் சகார் (14 விக்.,) எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாக செயல்படுகிறார். ஷர்துல் தாகூர் (8 போட்டி, 6 விக்.,) ஏமாற்றம் தருகிறார். சுழலில் இம்ரான் தாகிர் 11 போட்டியில் 16 விக்கெட் சாய்த்து பெரிதும் உதவியாக உள்ளார். இவருடன் ஜடேஜா (9 விக்.,) கைகொடுக்கிறார். சென்னை என்பதால் ஹர்பஜன் சிங் (5ல் 9 விக்.,) அணியில் இடம் பெறலாம்.

குயின்டன் அபாரம்

மும்பை அணி 10 போட்டியில் 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 4 போட்டியில் குறைந்தது 2ல் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கு குயின்டன் டி காக் (378 ரன்), சூர்யகுமார் (243), கேப்டன் ரோகித் சர்மா (228) என 'டாப் ஆர்டர்' பேட்டிங் உதவ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா (241), குர்னால் பாண்ட்யா (142) சகோதரர்களும் தங்கள் பங்கிற்கு எதிரணிகளுக்கு குடைச்சல் தருகின்றனர்.

சபாஷ் பும்ரா

பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா (11 விக்.,) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்ற போதிலும் கடைசி நேரங்களில் ரன்களை கட்டுப்படுத்துகிறார். மலிங்கா (8), ஹர்திக் பாண்ட்யா (8), குர்னால் பாண்ட்யா (6 விக்.,) ஆறுதல் தருகின்றனர். இளம் வீரர் ராகுல் சகார் (9) வரவு மும்பை அணிக்கு பெரும் பலம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement