Advertisement

கோல்கட்டாவில் கோஹ்லி கொண்டாட்டம்: கடைசி ஓவரில் பெங்களூரு வெற்றி

கோல்கட்டா: கோல்கட்டாவுக்கு எதிரான பிரிமியர் தொடர் லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராணா, ரசல் போராட்டம் வீணானது. அபாரமாக ஆடிய பெங்களூரு கேப்டன் கோஹ்லி சதம் விளாசினார்.

இந்தியாவில், பிரிமியர் கிரிக்கெட் தொடருக்கான 12வது சீசன் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் டிவிலியர்ஸ், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஹென்ரிச் கிளாசன், ஸ்டைன் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஸ்டைன், 9 ஆண்டுகளுக்க பின் பெங்களூரு அணியில் இணைந்தார். 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பார்த்திவ் ஏமாற்றம்: பெங்களூரு அணிக்கு பார்த்திவ் படேல், கேப்டன் விராத் கோஹ்லி ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஹாரி குர்னே, 3 ரன் மட்டும் வழங்கினார். சுனில் நரைன் வீசிய 2வது ஓவரில் 4 ரன் மட்டுமே கிடைத்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விளாசிய பார்த்திவ் (11), நரைன் 'சுழலில்' சிக்கினார். அடுத்து வந்த அக்ஸ்தீப் நாத், பிரசித் வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். மறுமுனையில் அசத்திய கோஹ்லி, குல்தீப் யாதவ் வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். ஆன்ட்ரி ரசல் 'வேகத்தில்' அக்ஸ்தீப் நாத் (13) வெளியேறினார்.

மொயீன் அரைசதம்: குல்தீப், பியுஸ் சாவ்லா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய மொயீன் அலி, குல்தீப் வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். குல்தீப் வீசிய 16வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய மொயீன், 24 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். அடுத்த 3 பந்தில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் பறக்கவிட்ட மொயீன் (66), கடைசி பந்தில் அவுட்டானார்.

கோஹ்லி அபாரம்: குர்னே வீசிய 17வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கோஹ்லி, பிரசித் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். குர்னே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய கோஹ்லி, பிரிமியர் அரங்கில் தனது 5வது சதமடித்தார். இவர், 100 ரன்னில் அவுட்டானார்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் (17) அவுட்டாகாமல் இருந்தார்.

ராணா விளாசல்: கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின் (1) ஏமாற்றினார். ஸ்டைன் வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரி அடித்த சுனில் நரைன் (18), நவ்தீப் சைனியிடம் சரணடைந்தார். சுப்மன் கில் (9), ராபின் உத்தப்பா (9) நிலைக்கவில்லை. பின் இணைந்த நிதிஷ் ராணா, ஆன்ட்ரி ரசல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. யுவேந்திர சகால் வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார் ராணா. மறுமுனையில் அசத்திய ரசல், சகால் வீசிய 15வது ஓவரில் 3 சிக்சர் விளாசினார். சைனி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ராணா அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த ரசல், 21 பந்தில் அரைசதம் எட்டினார். இது, இந்த சீசனில் பதிவான 2வது அதிவேக அரைசதம்.

கடைசி ஓவரில் கோல்கட்டாவின் வெற்றிக்கு 24 ரன் தேவைப்பட்டது. மொயீன் அலி வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரசல், 4வது பந்தை ரன் எடுக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ரசல் (65) 'ரன் அவுட்' ஆனார். கடைசி பந்தை ராணா சிக்சருக்கு அனுப்பிய போதும் வெற்றிக்கு போதவில்லை.

கோல்கட்டா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. ராணா (85) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு அணி சார்பில் ஸ்டைன் 2 விக்கெட் கைப்பற்றினார்.



5வது சதம்

அபாரமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராத் கோஹ்லி, பிரிமியர் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். டேவிட் வார்னர் (4 சதம்), வாட்சன் (4) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். முதலிடத்தில் கிறிஸ் கெய்ல் (6 சதம்) உள்ளார்.

* தவிர இது, இந்த சீசனில் பதிவான 5வது சதம். ஏற்கனவே ராஜஸ்தானின் சஞ்சு சாம்சன் (102* ரன், எதிர்: ஐதராபாத்), ஐதராபாத்தின் டேவிட் வார்னர் (100* ரன், எதிர்: பெங்களூரு), ஜானி பேர்ஸ்டோவ் (114 ரன், எதிர்: பெங்களூரு), பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல் (100* ரன், எதிர்: மும்பை) சதமடித்திருந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement