Advertisement

சரிந்தது சென்னை அணி * ஏமாற்றிய பேட்டிங்

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தியாவில் 12வது பிரிமியர் தொடர் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ரெய்னா, 'பேட்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணியில் சாம் பில்லிங்ஸ், கரண் சர்மா களமிறங்கினர்.

நல்ல துவக்கம்

சென்னை அணிக்கு வாட்சன், டுபிளசி ஜோடி இம்முறை சிறப்பான துவக்கம் கொடுத்தது. முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய இவர்கள் போகப் போக வேகம் எடுத்தனர். புவனேஷ்வர் பந்தில் பவுண்டரி அடித்த வாட்சன், சந்தீப் சர்மா பந்திலும் விளாசினார்.

கலீல் அகமது வீசிய 6வது ஓவரில் டுபிளசி, தலா ஒரு சிக்சர், பவுண்டரி என அடித்தார். அடுத்து வந்த நதீம் பந்தில் டுபிளசி சிக்சர் அடிக்க, வாட்சன் பவுண்டரியாக மாற்றினார்.

இதன் பின் திடீரென சரிவு ஏற்பட்டது. நதீம் சுழலில் வாட்சன் (31) போல்டானார். மறுபக்கம் விஜய் சங்கர் 'வேகத்தில்' சரிந்த டுபிளசி (45) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து திரும்பினார்.

ரஷித் 'இரண்டு'

போட்டியின் 14வது ஓவரை வீசிய ரஷித் கான் சென்னைக்கு இரட்டை 'அடி' கொடுத்தார். முதல் பந்தில் தடுமாறிய ரெய்னாவை (13) வெளியேற்றினார். நான்காவது பந்தில் கேதர் ஜாதவையும் (1) கிளப்பி விட்டார். சாம் பில்லிங்ஸ் 'டக்' அவுட்டானார்.

தொடர்ந்து ஐதராபாத் பவுலர்கள் அசத்த, அம்பதி ராயுடு, ஜடேஜா ரன் சேர்க்க முடியாமல் திணறினர். கடைசி ஐந்து ஓவர்களில் 30 ரன்கள் அடிக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் மட்டும் எடுத்தது. ஜடேஜா (10), அம்பதி ராயுடு (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

மின்னல் வேகம்

எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. சகார், ஷர்துல் பந்துகள் பவுண்டரிக்கு பறந்தன. இம்ரான் தாகிர் வீசிய முதல் ஓவரில் வார்னர், 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். 24 பந்தில் அரைசதம் அடித்த வார்னர் (50), சகாரிடம் வீழ்ந்தார். வில்லியம்சன் (3) இம்ரான் தாகிரிடம் சிக்கினார்.

மனம் தளராத பேர்ஸ்டோவ், ஜடேஜா பந்தில் பவுண்டரி, கரண் சர்மா ஓவரில் 2 சிக்சர் என அடிக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது ஐதராபாத். விஜய் சங்கர் 7, தீபக் ஹூடா 13 ரன்கள் எடுத்தனர்.

கடைசியில் பேர்ஸ்டோவ் ஒரு சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 16.5 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் (61), யூசுப் பதான் (0) அவுட்டாகாமல் இருந்தார்.60 பந்து, 52 ரன்சென்னை அணியின் பேட்டிங் மோசமாக இருந்தது. முதல் 10 ஓவரில் 80/1 ரன் எடுத்த நிலையில் கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 52 ரன்கள் மட்டும் எடுத்தது.

தோனி காயம்

சென்னை அணி கேப்டன் தோனி காயம் காரணமாக, பிரிமியர் அரங்கில் நான்காவது முறையாக களமிறங்கவில்லை. இதற்கு முன் 2010ல் (டில்லி, பஞ்சாப், பெங்களூரு) மூன்று போட்டிகளில் தோனி பங்கேற்வில்லை. இதில் சென்னை 1ல் வென்று, 2ல் தோற்றது.மூன்றாவது கீப்பர்

சென்னை அணிக்காக தோனி, 146 (2008-19) போட்டிகளில் விக்கெட் கீப்பராக களமிறங்கினார். அடுத்து பார்த்திவ் படேல் (2008-10) 9 போட்டிகளில் செயல்பட்டார். தற்போது மூன்றாவது விக்கெட் கீப்பராக நேற்று சாம் பில்லிங்ஸ் விளையாடினார்.

ரசிகருக்கு மறுப்பு

தோனியின் தீவிர ரசிகர் சரவணன் ஹரி. உடல் முழுவதும் மஞ்சள் நிறம் பூசிக் கொண்டு வருவார். நேற்று ஐதராபாத் மைதானத்தில் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மஞ்சள் நிறத்தை கழுவிக் கொண்டு வர வேண்டும், சென்னை கொடியை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை என நுழைவு வாயிலில் கூறியுள்ளனர்.

உடனடியாக இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தார் ஹரி. தவிர மற்ற ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, பிறகு அனுமதித்தனர். இதை சென்னை 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • muthukumar - manama,பஹ்ரைன்


    சென்னை அணி தோற்றது வருத்தம் தான். இருந்தாலும் ஓவர் சொதப்பல்ஸ். தல இல்லாதது ஒரு முக்கிய காரணம். வாட்சன் மற்றும் சின்ன தல திறமையை நிரூபிக்க வேண்டும். எல்லோரும் மீண்டு வருவார்கள் என நம்புகிறோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement