Advertisement

'ஸ்வீட் 16': ரவி சாஸ்திரி எதிர்பார்ப்பு

துபாய்: ''உலக கோப்பை தொடருக்கு 16 பேர் கொண்ட அணியை தேர்வு செய்ய விரும்பினோம். ஆனால், ஐ.சி.சி., அனுமதி அளிக்கவில்லை. இந்திய அணி, கேப்டன் கோஹ்லியை மட்டும் சார்ந்து இல்லை,''என, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் இங்கிலாந்தில் துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

உலக கோப்பை போன்ற நீண்ட தொடருக்கு 16 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட வேண்டுமென ஐ.சி.சி.,யிடம் வலியுறுத்தினோம். இதற்கு அனுமதி கிடைக்காததால், சிலரை தேர்வு செய்ய முடியவில்லை. வாய்ப்பு கிடைக்காதவர்கள் மனம் வருந்த வேண்டாம். ஏனெனில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், அழைப்பு தேடி வரும்.

'பேட்டிங்' வரிசையில் முதல் மூன்று இடங்களில் மாற்றம் இருக்காது. நான்காவது இடத்தில் களமிறங்குபவர் குறித்து எதிரணியின் பலம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். இந்திய அணி, கேப்டன் கோஹ்லியை மட்டும் சார்ந்து இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட், 'டுவென்டி-20', ஒருநாள் போட்டி என அனைத்திலும் அசத்தினோம். இப்படி தொடர்ந்து சிறப்பாக விளங்க வேண்டுமானால், ஒருவர் மட்டும் விளையாடினால் போதாது. மற்ற வீரர்களும் கைகொடுத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியில் பன்முக திறன் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். சொந்த மண்ணில் உலக கோப்பை தொடர் நடப்பதால், இவர்கள் சாதிக்க வாய்ப்பு அதிகம். மற்ற அணிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement