Advertisement

டில்லி 'ஹாட்ரிக்' வெற்றி

ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் போட்டியில் ரபாடா, மோரிஸ் 'வேகத்தில்' மிரட்ட டில்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. ஐதராபாத் அணிக்கு காயத்திலிருந்து மீண்ட கேப்டன் வில்லியன்சன் திரும்பினார். 'டாஸ்' வென்ற இவர் பவுலிங் தேர்வு செய்தார்.

மன்ரோ விளாசல்

டில்லி அணிக்கு துவக்கத்திலேயே 'ஷாக்' தந்தார் கலீல் அகமது. இவரது 'வேகத்தில்' பிரித்வி ஷா (4), ஷிகர் தவான் (7) ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சராக விளாசிய மன்ரோ 40 ரன்களில் அவுட்டானார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பொறுப்புடன் விளையாடினர். புவனேஷ்வர் பந்தில் ஸ்ரேயாஸ் (45) ஆட்டமிழந்தார். கலீல் பந்துவீச்சில் ரிஷாப் (23) சிக்கினார். ரஷித் 'சுழலில்' மோரிஸ் (4) அவுட்டானார். புவனேஷ்வர் பந்தில் கீமோ பால் (7) ஆட்டமிழந்தார். டில்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் (14), ரபாடா (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.

வார்னர் அரை சதம்

ஐதராபாத் அணிக்கு பேர்ஸ்டோவ், வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ரபாடா பந்துவீச்சில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். மோரிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பினார் பேர்ஸ்டோவ். இவர் 41 ரன்களில் அவுட்டானார். கேப்டன் வில்லியம்சன் (3) வந்த வேகத்தில் திரும்பினார். வார்னர் அரை சதம் எட்டினார். வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவின் ஒரே ஓவரில் வார்னர் (51), விஜய் ஷங்கர் (1) சிக்க அணி தடுமாறியது. மோரிஸ் 'வேகத்தில்' தீபக் ஹூடா (3), ரஷித் (0) சரிந்தனர். ரபாடா பந்தில் கலீல் டக் அவுட்டாக, ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. டில்லி சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.

8

பிரிமியர் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி தனது 100வது போட்டியில் களமிறங்கியது. இதன் மூலம், இந்த இலக்கை எட்டிய 8வது அணி என்ற பெருமை பெற்றது. ஏற்கனவே, சென்னை, கோல்கட்டா, மும்பை உள்ளிட்ட அணிகள் இந்த பெருமையை பெற்றுள்ளன.

100

இப்போட்டியில், புவனேஷ்வர் 'வேகத்தில்' டில்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்கினார். இதன் மூலம், புவனேஷ்வர் ஐதராபாத் அணிக்காக தனது 100வது விக்கெட்டை வீழ்த்தினார்.





Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement