Advertisement

சேப்பாக்கம் ஆடுகளம் சரியில்லை: தோனி, கோஹ்லி அதிருப்தி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் மந்தமாக இருந்ததாக சென்னை கேப்டன் தோனி, பெங்களூரு கேப்டன் கோஹ்லி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பிரிமியர் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது.

எளிய இலக்கை விரட்டிய சென்னை அணி 17.4 ஓவரில்தான் வெற்றியை எட்டியது. ஆடுகளம் மந்தமாக இருந்ததால், மொத்தமே போட்டியில் இரண்டு சிக்சர்தான் அடிக்கப்பட்டது.

இது குறித்து சென்னை கேப்டன் தோனி கூறுகையில், ''சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதை பார்த்து வியந்து போனோம். மிகவும் மந்தமாக காணப்பட்டது. ஆடுகளம் இன்னும் நன்றாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எதிர் வரும் போட்டிகளில் சிறப்பாக அமைக்கப்படும் என நம்புகிறேன். முதல் போட்டிக்கு முன் நடந்த பயிற்சி போட்டியில் இதே ஆடுகளத்தில்தான் விளையாடினோம். அப்போது, 'சுழலுக்கு' பெரியளவில் கைகொடுக்கவில்லை. ஆடுகளத்தை பற்றி முழுமையாக கணிக்க முடியாததால், 'டாஸ்' வென்று பவுலிங் தேர்வு செய்தேன்,'' என்றார்.

பெங்களூரு கேப்டன் கோஹ்லி கூறுகையில்,'' சேப்பாக்கம் ஆடுகளம் ஏமாற்றமாக அமைந்தது. பிரிமியர் தொடரை இப்படி மோசமாக துவக்குவோம் என நினைக்கவில்லை,'' என்றார்.

ஹர்பஜன் மறுப்பு

சென்னை சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் கூறுகையில்,'' சேப்பாக்கம் மைதானம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. இதற்காக, விளையாடவே முடியாத அளவில் இருந்தது என கூற முடியாது. போட்டியில் 180 ரன்கள் குவித்தால், ஆடுகளம் குறித்து யாரும் குறை சொல்வது இல்லை. 'சுழலுக்கு' அல்லது 'வேகத்திற்கு' ஒத்துழைத்தால் புகார் கூறுகின்றனர். பேட்ஸ்மேன் தடுமாறினால், பேட் மற்றும் பந்திற்கு இடையே நல்ல போட்டி காணப்பட்டது என்றுதான் அர்த்தம்,'' என்றார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement