Advertisement

வெற்றிக்கனியை எட்டுவது யாரு: சென்னையில் பிரிமியர் திருவிழா

சென்னை: பிரிமியர் தொடர் இன்று முதல் களை கட்ட உள்ளது. எட்டு அணிகள் கோப்பை வெல்ல பலப்பரீட்சை நடத்த உள்ளன. 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி மீண்டும் சாதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரிமியர் தொடரின் 12வது சீசன் இன்று ஆரம்பமாகிறது. சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றன. சேப்பாக்கத்தில் இன்று நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சென்னை அணியை பொறுத்தவரை மூன்று முறை2010, 2011, 2018) கோப்பை வென்ற பெருமை உடையது.

'சீனியர்' கேப்டன் தோனி 37, ஷேன் வாட்சன் 37, பிராவோ 35, டுபிளசி 34, அம்பதி ராயுடு 33, கேதர் ஜாதவ் 33, ரெய்னா 32, என பலரும் 'சீனியர்' ஆக உள்ளனர். இம்ரான் தாகிர் 39, ஹர்பஜன் 38, என வயதான 'சுழல்' வீரர்கள் இருந்தாலும் ஒரே ஓவரில் போட்டியின் திசையை மாற்றிவிடும் திறமை உண்டு. பவுலிங்கில் ஷர்துல் தாகூர், தீபக் சகார் கூட்டணியுடன் உலக கோப்பை கனவில் உள்ள ஜடேஜாவும் கைகொடுக்கலாம்.

பெங்களூரு நம்பிக்கை

பெங்களூரு அணி இதுவரை பங்கேற்ற 11 சீசனில் ஒருமுறை கூட கோப்பை வென்றது கிடையாது. உலக 'டுவென்டி-20' கிரிக்கெட்டின் 'நம்பர்-1' வீரர் கெய்ல் இருந்த போதும் சொதப்பியது தான் மிச்சம்.

இம்முறையும் கோஹ்லி தலைமையில் களமிறங்கும் இந்த அணியில் அதிரடி நட்சத்திரங்கள் டிவிலியர்ஸ், ஹெட்மயர், கிளாசன், 'ஆல் ரவுண்டர்கள்' கிராண்ட்ஹோம், மொயீன் அலி, ஸ்டாய்னிஸ், 'வேகப்புயல்' டிம் சவுத்தீ என அணியை பார்ப்பதற்கே மிரட்டலாக உள்ளது. இந்தியாவின் சகால், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் உட்பட பலர் உள்ளது நம்பிக்கை தருகிறது.

ரோகித் துவக்கம்

பிரிமியர் தொடரில் மூன்று முறை(2013, 2015, 2017) கோப்பை வென்றது மும்பை. நான்காவது கோப்பைக்காக களமிறங்கும் இந்த அணிக்கு எவின் லீவிஸ், கேப்டன் ரோகித் ஜோடி துவக்கம் தர காத்திருக்கிறது. குயின்டன் டி காக் 'மிடில் ஆர்டரில்' பலம் சேர்க்கலாம். இஷான் கிஷான், ஆதித்ய தாரே, குர்னால், ஹர்திக் 'பாண்ட்யா' சகோதரர்கள் உதவினால் நல்லது. 'சீனியர்கள்' யுவராஜ் சிங், போலார்டு, மலிங்கா எந்தளவுக்கு வெற்றிக்கு கைகொடுப்பர் எனத் தெரியவில்லை.அஷ்வின் எதிர்பார்ப்பு

பிரிமியர் தொடரின் சென்னை அணிக்காக பெரிதும் கைகொடுத்தவர் 'சுழல்' வீரர் அஷ்வின். தமிழகத்தை சேர்ந்த இவர், பஞ்சாப் அணிக்கு கேப்டனாக உள்ளார். கடந்த முறை துவக்கத்தில் ஜொலித்த இந்த அணி பின் சறுக்கியது. இம்முறை கெய்ல், மயங்க் அகர்வால், முகமது ஷமி, டேவிட் மில்லர் உதவினால் மீண்டு வரலாம்.

'ஐந்து' ஏக்கம்

கோல்கட்டா அணிக்கு காம்பிர் கேப்டனாக இருந்தது பொற்காலம் எனலாம். 2012, 2014 என இரு முறை கோப்பை வென்று தந்தார். பின் தொடர்ந்து தடுமாறியது. கடந்த சீசனில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் தலைமையில் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. கோப்பை வென்று 5 ஆண்டு ஆன நிலையில் இம்முறை சாதிக்க முயற்சிக்கலாம்.

சுப்மன் கில், கிறிஸ் லின், பிராத்வைட், உத்தப்பா, ரசல் தவிர பெரியளவில் பேட்ஸ்மேன்கள் இல்லை. சுழலில் சுனில் நரைன், குல்தீப் நம்பிக்கை தருகின்றனர்.

தவிர ஒரு முறை சாம்பியன்களான ராஜஸ்தான் (2008), ஐதராபாத் (2016), முதல் கோப்பை வெல்லத் துடிக்கும் ரிஷாப் பன்ட் இடம் பெற்ற டில்லியும் கோப்பை போட்டியில் உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement