Advertisement

பாகிஸ்தானுடன் உறவே வேண்டாம்: காட்டமாக சொல்கிறார் கங்குலி

புதுடில்லி: ''உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நமது வீரர்கள் பங்கேற்கக்கூடாது. ஹாக்கி, கால்பந்து என எந்த விளையாட்டிலும் இவர்களுடன் விளையாடக்கூடாது. எல்லா உறவையும் ரத்து செய்ய வேண்டும்,'' என, இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல் பாகிஸ்தான் மீதான கோபத்தை இந்திய மக்களிடம் அதிகரித்து உள்ளது. பாகிஸ்தான் பொருட்களுக்கான சுங்க வரி அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. தற்போது, இதன் தாக்கம் கிரிக்கெட்டிலும் எதிரொலிக்கிறது. இங்கிலாந்து மண்ணில் வரும் ஜூன் 16ல் (மான்செஸ்டர்) நடக்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பங்கேற்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்திய முன்னாள் கேப்டன் அசார், சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். சகால், ஷமி உள்ளிட்டோரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சரியான பதிலடி

இது குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: இங்கிலாந்தில் வரும் மே இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு போட்டியில் மோதும். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு லீக் போட்டியை புறக்கணிப்பதால், பெரிய பிரச்னையாக மாற வாய்ப்பில்லை. ஆனால், இந்திய அணி இல்லாமல் உலக கோப்பை தொடரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்த முடியாது. அதே நேரத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.சி.சி.,க்கு அழுத்தம் கொடுக்கும் வலிமை இந்தியாவுக்கு உள்ளது. பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ரத்து செய்ய வேண்டும்

பாகிஸ்தானுடன் போட்டியில் மோதக்கூடாது என்ற இந்திய மக்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. புல்வாமா தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டில் உறவை துண்டிப்பதே சரி. ஹாக்கி, கால்பந்து என எந்த விளையாட்டிலும் இவர்களுடன் விளையாடக்கூடாது. எல்லா உறவையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கங்குலி கூறினார்.



கவாஸ்கர் முரண்பாடு

பல்வேறு வீரர்களும் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர் முரண்பாடான கருத்துடன் உள்ளார். இது குறித்து கவாஸ்கர் கூறியது: இதுவரை பாகிஸ்தானுடன் விளையாடிய அனைத்து உலக கோப்பை போட்டியிலும் இந்தியா தான் வென்றுள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடக்கவுள்ள போட்டியிலும் நிச்சயமாக நமது அணிதான் வெல்லும். இப்போட்டியை நாம் புறக்கணித்தால் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துவிடும். எனவே, நமது வீரர்கள் போட்டியில் பங்கேற்று வெல்வதுடன், பாகிஸ்தானை, அடுத்த சுற்றுக்கு முன்னேற விடாமல் தடுக்கலாம்.

மத்திய அரசுக்கு ஆதரவு

அதே நேரம், மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன். பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தாலும், அதை ஆதரிப்பேன். 2012க்குப்பின், பாகிஸ்தானுடன் இரு அணிகளுக்கு இடையிலான தொடரில் பங்கேற்பது இல்லை. இப்படித்தான் அவர்களுக்கு நெருக்கடி தர வேண்டும். பல அணிகள் விளையாடும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மறுத்தால் நமது அணிக்கு பாதிப்பு ஏற்படும். இந்த இரண்டு புள்ளி கிடைக்காமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஆனால், பாகிஸ்தானுடன் மோதினால் அவர்களை லீக் சுற்றுடன் வெளியேற்றலாம். இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement