Advertisement

'டாப்–100' பட்டியலில் குன்னேஸ்வரன்

புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதன்முறையாக 97வது இடம் பிடித்தார்.

டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 103வது இடத்தில் இருந்து முதன்முறையாக 97வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் சென்னையில் நடந்த ஏ.டி.பி., சாலஞ்சர் தொடரில் அரையிறுதி வரை சென்றிருந்தார். இதன்மூலம் 'டாப்-100' பட்டியலில் இடம் பிடித்த 3வது இந்திய வீரரானார். இதற்கு முன், சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி இம்மைல்கல்லை எட்டியிருந்தனர். குன்னேஸ்வரன், 'டாப்-100' வரிசையில் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும்பட்சத்தில் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு நேரடியாக தகுதி பெறலாம்.

மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 5 இடங்கள் முன்னேறி 128வது இடம் பிடித்தார். காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காமல் இருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 156வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான சாகேத் மைனேனி (255வது இடம்), சசிகுமார் முகுந்த் (271வது) முன்னேற்றம் கண்டனர்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, 37வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இவரை அடுத்து இந்தியாவின் திவிஜ் ஷரண் (39வது இடம்), லியாண்டர் பயஸ் (75வது), ஜீவன் நெடுஞ்செழியன் (77வது), புரவ் ராஜா (100வது) ஆகியோர் முன்னேற்றம் அடைந்தனர்.

பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 3 இடம் முன்னேறி 165வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தண்டி, 211வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement