Advertisement

குல்தீப் யாதவ் 'நம்பர்–2'

துபாய்: ஐ.சி.சி., 'டுவென்டி-20' பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், முதன்முறையாக 'நம்பர்-2' இடத்துக்கு முன்னேறினார்.

சர்வதேச 'டுவென்டி-20' போட்டியில் சிறந்த விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய 'சைனாமேன்' சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 728 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருந்து முதன்முறையாக 2வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த 3வது 'டுவென்டி-20' அசத்திய இவர், 2 விக்கெட் கைப்பற்றினார். முதலிடத்தில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (793 புள்ளி) நீடிக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் ஏமாற்றிய மற்றொரு இந்திய சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சகால் (2 போட்டி, 72 ரன், ஒரு விக்கெட்), 609 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவேனேஷ்வர் குமார் (608 புள்ளி) 18வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

கோஹ்லி பின்னடைவு: பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா (698 புள்ளி), 10வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு முன்னேறினார். இளம் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் (677), 7வது இடத்தில் இருந்து 10வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் (671 புள்ளி) 11வது இடத்துக்கு முன்னேறினார். நியூசிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரில் விளையாடாத இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (599 புள்ளி), 15வது இடத்தில் இருந்து 19வது இடத்தை ஜிம்பாப்வேயின் ஹாமில்டன் மசகட்சாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியா 'நம்பர்-2'

'டுவென்டி-20' அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 124 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. நியூசிலாந்துக்கு எதிரான 'டுவென்டி-20' தொடரை இழந்த இந்திய அணி, 2 'ரேங்கிங்' புள்ளிகளை மட்டும் இழந்தது. முதலிடத்தில் பாகிஸ்தான் அணி (135 புள்ளி) உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement