Advertisement

கடைசி ஓவரில் இந்தியா பரிதாபம்: 'டுவென்டி–20' தொடரை இழந்து ஏமாற்றம்

ஹாமில்டன்: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் தொடர் வெற்றி, நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடர் வெற்றி என நல்லா போய்க் கொண்டிருந்த இந்திய அணி திடீரென தடுமாறியது. நேற்று நடந்த மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் வெறும் நாலு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று ஹாமில்டனில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சகாலுக்குப்பதில் குல்தீப் இடம்பிடித்தார்.

மாற்றம் தந்த குல்தீப்

நியூசிலாந்து அணிக்கு செய்பெர்ட், மன்ரோ ஜோடி அபார துவக்கம் தந்தது. முதல் 6 ஓவரில் அணி 66 ரன்களை எட்டியது. குல்தீப் மாற்றம் தந்தார். இவரது பந்தில் தோனியின் துல்லிய 'ஸ்டம்பிங்கில்' செய்பெர்ட் (43) சிக்கினார்.

அரை சதம் கடந்த மன்ரோ (72), குல்தீப் 'சுழலில்' அவுட்டானார். கேப்டன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்தார். கிராண்ட்ஹோம், மிட்சல் இணைந்து பவுலர்களுக்கு நெருக்கடி தந்தனர். குர்னால் பந்துவீச்சில் கிராண்ட்ஹோம் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். புவனேஷ்வர் 'வேகத்தில்' இவர் 30 ரன்களில் அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (14), மிட்சல் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

விஜய் மிரட்டல்

கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே தவான் (5) 'ஷாக்' அளித்தார். கேப்டன் ரோகித்துடன் இணைந்த விஜய் ஷங்கர் மிரட்டினார். ஸ்காட் வீசிய மூன்றாவது ஒவரில் இவர் இரண்டு பவுண்டரி விரட்டினார். மறுபுறம் ரோகித் நிதானமாக விளையாடினார். சோதி பந்துவீச்சையும் விட்டு வைக்காத தமிழகத்தின் ஷங்கர் இரண்டு சிக்சர் அடித்தார். சான்ட்னர் 'சுழலில்' இவர் 43 ரன்களில் சிக்கினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 10 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ரிஷாப் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விக்கெட் சரிவு

இதன்பின் விக்கெட் சரிவு துவங்கியது. மிட்சல் 'வேகத்தில்' ரோகித் (38) வெளியேறினார். இரண்டு சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா (21) நிலைக்கவில்லை. பெரிதும் நம்பப்பட்ட தோனி 2 ரன் மட்டும் எடுத்தார். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்-குர்னால் பாண்ட்யாவுடன் 'பார்ட்னர்ஷிப்' அமைத்தார். ஸ்காட் பந்தை கார்த்திக் சிக்சருக்கு அனுப்ப, இந்திய ரசிகர்கள் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தனர்.

சவுத்தீ வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. வெற்றி கைகூடும் என எதிர்பார்த்த நிலையில், முதல் 5 பந்தில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்தில் கார்த்திக் சிக்சர் அடித்தபோதும், வெற்றிக்கு போதவில்லை. இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. தொடரை 1-2 என இழந்தது. தினேஷ் கார்த்திக் (33), குர்னால் (26) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை மன்ரோ வென்றார்.











Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement