Advertisement

ரோகித் சர்மா சதம் வீண்: இந்திய அணி ஏமாற்றம்

சிட்னி: சிட்னி ஒருநாள் போட்டியின் துவக்கத்தில் 'விழுந்த' இந்திய அணி 4 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின் ரோகித சர்மா-தோனி சேர்ந்து 137 ரன் சேர்க்க, மெல்ல எழுந்தது. கடைசி கட்டத்தில் மீண்டும் சரிவு ஏற்பட, ஆஸ்திரேலியாவிடம் 34 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ரோகித் சதம் வீணானது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி சிட்னியில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரன்டர்ப் அறிமுகம் ஆனார்.

மூன்று அரைசதம்: ஆஸ்திரேலிய அணிக்கு பின்ச், அலெக்ஸ் கேரி துவக்கம் தந்தனர். புவனேஷ்வர் வீசிய போட்டியின் 2.2வது ஓவரில் பின்ச் (6) போல்டானார். குல்தீப் ஓவரில் பவுண்டரி அடித்த கேரி (24), அதே ஓவரில் அவுட்டானார்.

கவாஜா ஒருநாள் அரங்கில் 5வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா 'சுழலில்' கவாஜா (59) சிக்கினார்.

மறுபக்கம் வேகமாக ரன்கள் சேர்த்த ஷான் மார்ஷ், தனது 13வது அரைசதம் எட்டினார். இவர் 54 ரன்கள் எடுத்த போது, குல்தீப் சுழலில் சரிந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் 73 ரன்னுக்கு கிளம்பினார்.

கடைசி 10 ஓவரில் 93 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. ஸ்டாய்னிஸ் (47), மேக்ஸ்வெல் (11) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப், புவனேஷ்வர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தோனி நம்பிக்கை: பின் களமிறங்கிய இந்திய அணி, ரன்களை சேர்ப்பதற்கு பதில் விக்கெட்டுகளை மடமடவென இழந்தது. தவான்(0), கேப்டன் கோஹ்லி(3), அம்பதி ராயுடு(0) விரைவாக வெளியேற, 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்திய அணியை மீட்க 'சீனியர்' தோனி முன்னதாக களமிறங்கினார். இவரும் ரோகித்தும் இணைந்து போராடினர். 10 ஓவரில் இந்தியா 21/3 ரன்கள் மட்டும் எடுத்தது.

ரோகித் சதம்: ஸ்டாய்னிஸ் பந்தில் பவுண்டரி அடித்த தோனி, ஒருநாள் அரங்கில் 68வது அரைசதம் எட்டினார். 4வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் தோனி (51) அவுட்டாக, சிக்கல் ஏற்பட்டது. மேக்ஸ்வெல் பந்தில் பவுண்டரி அடித்த ரோகித் சர்மா, கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் சேர்த்தார். சிடில் வீசிய 39 வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்த இவர், ஒருநாள் அரங்கில் 22வது சதம் அடித்தார்.

தினேஷ் கார்த்திக் (12), ஜடேஜா (8) சீரான இடைவெளியில் கிளம்பினர். ரோகித் சர்மா 133 ரன்னுக்கு அவுட்டாக இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 254 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. புவனேஷ்வர் (29) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட்சன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது.

இரண்டாவது போட்டி வரும் 15ம் தேதி அடிலெய்டில் நடக்கவுள்ளது.

இரண்டாவது முறை

இந்திய அணி 2வது முறையாக நேற்று முதல் 20 ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இதற்கு முன் 2001ல் இதுபோல நடந்தது.

மூன்றாவது ஜோடி

தோனி, ரோகித் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 4வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த 3வது சிறந்த ஜோடி (137 ரன்) என்ற பெருமை பெற்றனர். முதல் இரு இடங்களில் லட்சுமண், யுவராஜ் (213, சிட்னி, 2004), தோனி, யுவராஜ் (148, டில்லி, 2009) ஜோடி உள்ளது.

நான்கு ரன்

ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் அரங்கில் இந்திய அணி 'டாப்-3' விக்கெட்டுகளை குறைந்த ரன்னுக்கு (4 ரன்) இழந்தது 2வது முறையாக நேற்று நடந்தது. இதற்கு முன் 2004ல் அடிலெய்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக இதுபோல (4 ரன்/3 விக்.,) ஏமாற்றியது.

20வது முறை

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இந்தியா 20வது முறையாக 'பார்ட்னர்ஷிப்பில்' 100 ரன்னுக்கும் மேல் எடுத்தது. நேற்று தோனி, ரோகித் இணைந்து 137 ரன்கள் எடுத்தனர்.

* 4வது விக்கெட்டுக்கு 100 ரன்னுக்கும் மேல் இந்தியா 5வது முறையாக எடுத்தது.

22 சதம்

ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்தவர்களில் கங்குலி (இந்தியா), தில்ஷனுடன் (இலங்கை) இணைந்தார் ரோகித் சர்மா. இவர்கள் தலா 22 சதம் அடித்தனர். அதிக சதம் அடித்தவர்களில் இந்தியாவின் சச்சின் (49), கோஹ்லி (38), பாண்டிங் (30, ஆஸி.,), ஜெயசூர்யா (28, இலங்கை), ஆம்லா (26, தெ.ஆப்.,), சங்ககரா (25, இலங்கை), டிவிலியர்ஸ் (25, தெ.ஆப்.,), கெய்ல் (23, வெ.இண்டீஸ்) முன்னணியில் உள்ளனர்.

100 விக்கெட்

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஒருநாள் அரங்கில் 100வது விக்கெட் வீழ்த்தினார். நேற்று தனது 96வது போட்டியில் இந்த இலக்கை எட்டினார்.

* புவனேஷ்வரின் முதல் (ஹபீஸ், பாக்.,), 100வது (பின்ச், ஆஸி.,) விக்கெட்டுகள் 'போல்டு' முறையில் கிடைத்தது கூடுதல் 'ஸ்பெஷல்'.

* இந்த மைல்கல்லை அடைந்த 18 வது இந்திய பவுலர் ஆனார். முதல் மூன்று இடத்தில் கும்ளே (334), ஸ்ரீநாத் (315), அகார்கர் (288) உள்ளனர்.

169 போட்டி

கடந்த 2010க்குப் பின் நேற்று மீண்டும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் களமிறங்கினார் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில். இந்த இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி 169 போட்டிகளில் பங்கேற்றது. பிராட் ஹாக் (1996-2002) 156 போட்டிகள் இடைவெளியில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றதே இதற்கு முன் அதிகம்.

205 சிக்சர்

நேற்று 6 சிக்சர் அடித்த ரோகித் சர்மா (208 சிக்சர்), ஒருநாள் அரங்கில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்சை (204) முந்தி 5வது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் அப்ரிதி (351, பாக்.,), கெய்ல் (275, வெ.இண்டீஸ்), ஜெயசூர்யா (270, இலங்கை), தோனி (219, இந்தியா) உள்ளனர்.

1000வது வெற்றி

டெஸ்டில் 384, ஒருநாள் அரங்கில் 558, 'டுவென்டி-20'ல் 58 என கிரிக்கெட் அரங்கில் தனது 1000வது வெற்றியை நேற்று பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.

* இங்கிலாந்து (774 வெற்றி), இந்தியா (711), பாகிஸ்தான் (702) அணிகள் அடுத்த மூன்று இடத்தில் உள்ளன. 5, 6வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் (608), தென் ஆப்ரிக்கா (596) உள்ளன. இலங்கை (524), நியூசிலாந்து (487) அணிகள் 7, 8வதாக உள்ளன.

1763 ரன்கள்

நேற்று 38 ரன்கள் எடுத்த போது இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கில்கிறிஸ்ட்டை (1622) முந்தி 3வது இடம் பிடித்தார் ரோகித் சர்மா (மொத்தம் 1763). முதல் இரு இடங்களில் சச்சின் (3077), பாண்டிங் (2164) உள்ளனர்.

7,500 ரன்கள்

ரோகித் சர்மா 46 ரன்கள் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 7,500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இவர் 194 போட்டிகளில் 7587 ரன்கள் எடுத்துள்ளார்.















Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • kannaiya srinivasan - Muscat,ஓமன்


    தோல்விதான் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அஸ்திவாரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement