Advertisement

'கலங்கரை விளக்கம்' தோனி * ரோகித் சர்மா பாராட்டு

சிட்னி: '' இந்திய அணியின் தோனி எங்களுக்கு கலங்கரை விளக்கம் போன்றவர். வரும் உலக கோப்பை தொடரில் இவர் பெரும் உதவியாக இருப்பார்,'' என ரோகித் சர்மா தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் துவக்க வீரர் ரோகித் சர்மா 31. 'சீனியர்' தோனி குறித்து இவர் கூறியது:

இந்திய அணிக்காக பல ஆண்டுகள் கேப்டனாக இருந்தவர் தோனி. பல்வேறு வெற்றிகள் பெற்றுத் தந்துள்ளார். ஒருநாள் அணியில் இவர் இடம் பெற்றிருப்பது மிகவும் அவசியமானது. வீரர்கள் அறை, ('டிரசிங் ரூம்') மற்றும் மைதானத்தில் இவரது உதவி அதிகம் தேவைப்படும்.

விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு, கேப்டனுக்கு தேவையான ஆலோசனைகள் தருகிறார். எங்களைப் போன்ற வீரர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார். பேட்டிங்கில் இவர் பின்வரிசையில் களமிறங்குவது எங்களுக்கு நம்பிக்கையை தருகிறது.

பெரும் உதவி

சிறப்பான 'பினிஷிங்' திறமை காரணமாக பல போட்டிகளில் தோனி இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்துள்ளார். இந்த அசாத்தியமான திறமை அணிக்கு பெரும் உதவியாக இருக்கும். பொறுமையான, நிதானமான தோனியின் 'அட்வைஸ்', போட்டி எப்படிச் செல்லும் என்பது குறித்த அவரது எண்ணம், அந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற தோனியின் ஆலோசனைகள் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கும். இவரது இருப்பிடம் எங்களுக்கு மிகப்பெரிய துாண்டுகோலாக அமைகிறது.

வெற்றிக்கு காரணம்

சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சகால் என இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். தோனி விக்கெட் கீப்பராக இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுவர், என்ன செய்யப் போகின்றனர் என்ற தகவல்களை இவர் பவுலர்களுக்கு தருகிறார். இது அணிக்கு மிகப்பெரிய பலம். சகால், குல்தீப் இருவரும் 2017 முதல் இணைந்து அசத்துகின்றனர்.

அன்னிய மண்ணிலும் இந்த ஜோடி சாதிப்பதற்கு தோனியும் முக்கிய காரணம். தேவையான இடங்களில் பீல்டிங் அமைத்து, சரியான இடத்தில் பந்து வீசச் செய்து எதிரணிக்கு நெருக்கடி தருவார். கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பும் இந்திய அணியில் முக்கிய அங்கமாக தோனி திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

யாருக்கும் உறுதியில்லை

உலக கோப்பை இந்திய அணி குறித்து ரோகித் சர்மா கூறுகையில்,'' உலக கோப்பை தொடருக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் என்பது இதுவரை யாருக்கும் உறுதியில்லை. இது எல்லோருக்கும் தெரியும். அடுத்த நான்கு மாதங்களில் 13 ஒருநாள் போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி உலக கோப்பை தொடரில் களமிறங்கும் என நம்புகிறேன். ஒருசில மாற்றங்கள் மட்டும் இருக்கலாம்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement