Advertisement

கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று இரண்டாவது டெஸ்ட் துவக்கம்

ஐதராபாத்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று ஐதராபாத்தில் துவங்குகிறது. இதில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெ ளிப்படுத்தி இந்திய அணி தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று ஐதராபாத்தில் துவங்குகிறது.

ராகுல் எதிர்பார்ப்பு

இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஜோடி மீண்டும் துவக்கம் தர காத்திருக்கிறது. கடைசியாக களமிறங்கிய 17 இன்னிங்சில் இரு முறை மட்டும் தான் (54, 149 ரன்) சிறப்பாக செயல்பட்டார் ராகுல்.

இருப்பினும் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் வகையில் ராகுலுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. அறிமுக டெஸ்டில் சதம் அடித்த பிரித்வி (134 ரன், 19 பவுண்டரி) தனது விளாசலை தொடரலாம்.

குறைந்த வேகம்

ராஜ் கோட் டெஸ்டில் அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கிற்கு எதிராக கேப்டன் கோஹ்லி, 230 பந்தில் 139 ரன்கள் எடுத்தது, 10 பவுண்டரி மட்டும் அடித்தது சற்று வியப்பை தந்தது. இவர் பேட்டிங்கில் புதிய முறையில் முயற்சி செய்தார் என கூறப்படுகிறது. பேட்டிங் திறனை பாதிக்காத வகையில் இன்று விரைவாக ரன்கள் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.

ரகானே ஏமாற்றம்

அடுத்து வரும் ரகானே தான் தொடர்ந்து தடுமாறுகிறார். 2013-14 சீசனில் டர்பன் (96), வெலிங்டன் (118), லார்ட்ஸ் (103), மெல்போர்ன் (145) என அன்னிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் 2017, கொழும்பு டெஸ்ட் (132) போட்டிக்குப் பின் இதுவரை 20 இன்னிங்சில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

இரு முறை மட்டும் அரைசதம் (81, 51) எட்டினார். இந்த டெஸ்டில் இவர் மீண்டு வருவார் என நம்பப்படுகிறது. மற்றபடி 92 ரன் எடுத்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட், 100 ரன் விளாசிய ஜடேஜாவும் ரன் குவிப்புக்கு கைகொடுக்கலாம். துவக்க வீரர் மயங்க் அகர்வால் இன்னும் காத்திருக்க வேண்டும்.

பவுலிங்கை பொறுத்தவரையில் 'வேகத்தில்' உமேஷ் யாதவ், முகமது ஷமி தொடர்கின்றனர். ஷர்துல் தாகூர் 12வது வீரராகவே உள்ளார். சுழலில் 'சீனியர்' அஷ்வின், ஜடேஜா கூட்டணியுடன் 'ஜூனியர்' குல்தீப் யாதவ் மீண்டும் மிரட்டுவார் என நம்பலாம். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹோல்டர் திரும்புவது உறுதியில்லாமல் உள்ளது. பேட்டிங்கில் பாவெல் (83), ராஸ்டன் சேஸ் (53) மட்டும் ஆறுதல் தருகின்றனர். மற்றபடி பிராத்வைட், டவ்ரிச் என ஒருவரும் பொறுப்பாக விளையாடவில்லை. டெஸ்ட் என்பதை மறந்து வேகமாக ரன்கள் சேர்ப்பதில் கவனம் செலுத்தினர். இன்று என்ன செய்வர் என பொறுத்திருந்து காணலாம். பவுலிங்கில் கீமர் ரோச் வருகை, கீமோ பால், பிஷூ பலம் சேர்க்கலாம்.

இந்த பயிற்சி போதுமா

கடந்த 2011ல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீசை (2-0) எளிதாக வீழ்த்தியது இந்தியா. பின் ஆஸ்திரேலிய மண்ணில் 0-4 என தோற்றது.

* 2013ல் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்டிலும் தலா 3 நாட்களுக்குள் வெற்றி பெற்றது இந்தியா. பின் தென் ஆப்ரிக்கா சென்று 0-1 என தொடரை இழந்தது. இதனால் அன்னிய மண்ணில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் தொடர் இந்தியாவுக்கு சரியான பயிற்சியாக அமையவில்லை.

வரும் டிசம்பர் முதல் இந்திய அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. இதற்கு முன் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரை இந்தியா எளிதாக வென்றாலும், ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க வேண்டும் என்று தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மழை வருமா

இரண்டாவது டெஸ்ட் நடக்கும் ஐதராபாத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை வர வாய்ப்பில்லை. இது கடைசி இரு நாட்களிலும் தொடரும். இதனால் ஐந்து நாட்கள் போட்டி முழுமையாக நடக்க வாய்ப்புள்ளது.

9

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய மண்ணில் கடைசியாக பங்கேற்ற 3 டெஸ்டும் தலா 3 நாட்கள் என 9 நாட்களில் முடிந்தது. இதில் 720.5 ஓவர்கள் மட்டும் சந்தித்த இந்த அணி, மூன்று போட்டியிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

10

கடந்த 2013 முதல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி, 2 முறை ஆஸ்திரேலியா (4-0, 2012-13, 2-1, 2016-17) தவிர வெஸ்ட் இண்டீஸ் (2-0, 2013-14) தென் ஆப்ரிக்கா (3-0, 2015-16), நியூசிலாந்து (3-0, 2016-17), இங்கிலாந்து (4-0, 2016-17), வங்கதேசம் (1-0, 2016-17), இலங்கை (1-0, 2017-18) மற்றும் ஆப்கானிஸ்தான் (1-0, 2018) அணிகளுக்கு எதிராக வென்றது. இத்தொடரில் இந்தியா வென்றால் சொந்த மண்ணில் தொடர்ந்து 10 தொடர்களை கைப்பற்றலாம்.

ஆடுகளம் எப்படி

ஐதராபாத் ஆடுகளம் முதல் இரண்டு நாட்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். மூன்றாவது நாளில் இருந்து பந்தில் திருப்பம் ஏற்படும். பந்துகள் கணிக்க முடியாதவாறு 'பவுன்சர்' ஆகலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement