Advertisement

பாதிக்கிணறு தாண்டினால் போதுமா...: கேப்டன் கோஹ்லி ஆதங்கம்

சவுத்தாம்ப்டன்: ''அன்னிய மண்ணில் நன்றாக விளையாடினால் மட்டும் போதாது. நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக் கோட்டை கடக்க வேண்டும்,'' என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்டில் தோற்ற இந்திய அணி 1-3 என தொடரை இழந்தது. இதுகுறித்து கேப்டன் கோஹ்லி கூறியது:

நாம் 30 முதல் 50 ரன்கள் தான் குறைவாக எடுத்தோம் என போட்டி முடிந்ததும் கூறக் கூடாது. களத்தில் போதே அதை தெரிந்து கொண்டு ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். நாம் சிறப்பாகத் தான் விளையாடுகிறோம் எனத் தெரியும். ஆனால் இதையே திரும்பத் திரும்ப இன்னும் எத்தனை நாளைக்குத் தான் சொல்லிக் கொண்டிருப்பது.

அன்னியமண்ணில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்கிறோம் என்று கூறினால் மட்டும் போதாது. போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து தோற்பதை விட, அந்த வெற்றிக் கோட்டை கடக்கும் கலையை கற்க வேண்டும். இதற்கான திறமை நம்மிடம் உள்ளது.

முன்னேற்றம் முக்கியம்

நெருக்கடியான நேரங்களில் சூழ்நிலைக்கு தகுந்து நாம் எதிரணியினரை எப்படி சமாளிக்கிறோம் என்பது குறித்து இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். போட்டியின் போது நமக்கு சாதகமாக நிலை ஏற்படும் போது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வேண்டும். மாறாக எதிரணியினர் மீண்டு வர அனுமதிக்கக் கூடாது.

மீண்டும் மீண்டும் போராட வேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டு வந்தால் அதுகுறித்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டிங்காம் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தியதால் தான் வெற்றி பெற முடிந்தது. துணிச்சலான, பயமற்ற ஆட்டத்தை தொடரின் துவக்கத்தில் இருந்தே வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

'முதல்' முக்கியம்

நீண்ட தொடரில் மீண்டு வந்திருந்தால் நல்லது. மாறாக மீள முடியாத நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் மிக முக்கியம். நான்காவது டெஸ்டில் நான் அவுட்டாகாமல் சற்று நீடித்து இருந்தால் முன்னிலை இன்னும் அதிகமாகி இருக்கும்.

தவிர சில சிறந்த 'பார்ட்னர்ஷிப்' அமைந்திருந்தால் கூட போதும். நல்லவேளை புஜாரா தாக்குப்பிடித்ததால் 26 ரன் முன்னிலை கிடைத்தது. மற்றபடி எங்களால் முடிந்தவரை சிறப்பாகத்தான் விளையாடுகிறோம்.

இவ்வாறு கோஹ்லி கூறினார்.

எளிதாக முடியாது

கோஹ்லி கூறுகையில்,'' மற்ற அணிகள் இந்தியாவில் விளையாடும் போது, எளதாக தோற்று விடுகின்றன. அதே அணிகள் அவர்களது சொந்த மண்ணில் எங்களை எளிதாக வெல்ல முடியாது. போராடினால் தான் வெற்றி கிடைக்கும். இது எங்களுக்கு பெரிய உற்சாகம் தருகிறது,'' என்றார்.

முடிந்ததை செய்தார்

கோஹ்லி கூறுகையில்,'' அஷ்வின் முடிந்தவரை சிறப்பாக பவுலிங் செய்தார். எதிர்பார்த்த விக்கெட் கிடைக்கவில்லை. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடியதையும் கவனிக்க வேண்டும்,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Venkat Krish - SINGAPORE,சிங்கப்பூர்


    முதல் தவறு, Ageas Bowl 3 நாட்களுக்கு பிறகு ஸ்பின்னுக்கு சாதகமாகும் என்று தெரிந்தும் ரவீந்திர ஜடேஜா வை எடுக்காமல் Hardik Pandya வை தேர்வு செய்தது. சாம் Curran ஜடேஜா வை இது வரை எதிர் கொண்டதில்லை. மேலும் இங்கிலாந்து 2 spinners செலக்ட் செய்தது தெரிந்தும் அஸ்ஹவினுடன் மட்டும் களம் இறங்கியது. 2 வது தவறு அஸ்ஹவினை மட்டுமே 35 ஓவர் பந்து வீச அழைத்தது. இஷாந்த் சர்மா வை வேஸ்ட் செய்தது. இங்கிலாந்து அஸ்வின் ஐ சமாளித்த போதும் வேறு யாரையும் மாற்றாமல் அஸ்ஹவினுக்கே பௌலிங் கொடுத்தது. இவை தான் தோல்விக்கு முக்கிய காரணம். முதல் இன்னிங்ஸ் இல் 86 /6 இறந்தவது இன்னிங்ஸ் இல் 5 / 122 (effectivly 95 / 5 ). இருந்தும் aggressive fielding set பண்ணாமல் கொக்கின் தலையில் வெண்ணை வைத்து காத்திருப்பது போல அடுத்த விக்கெட் விழுமா என காத்திருந்தது இன்னும் பல தவறுகள். Kholi is aggressive but his captaincy is old school. He did not do anything innovative. Ashwin leaked runs after runs by bowling atleast one ball short or on the leg side. So now to crib that the team has to learn is naive. He should learn the art of captaincy.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement