Advertisement

ப்ளீஸ்... ரசிகைகள் வேண்டாம்

கால்பந்து போட்டிகள் என்றாலே கவர்ச்சிகரமான ஆடைகளில் ரசிகைகள் களமிறங்கி விடுவர். இதைப் பார்ப்பதற்கு என்றே கேலரியில் கூட்டம் கூடும். 'டிவி' ஒளிபரப்பு நிறுவனங்கள் இவர்களை 'கவர்' செய்து அசத்துவர். இதற்கு 'பிபா' வேட்டு வைத்துள்ளது.

இது குறித்து 'பிபா' ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பெட்ரிகோ கூறுகையில்,'' போட்டி ஒளிபரப்பாளர்கள் சில ரசிகைகளை 'கேமராவில்' அதிகமாக காட்டுகின்றனர். இதனால், கால்பந்து மீதான மதிப்பு குறைகிறது. இம்மாதிரியான ஒளிபரப்பை 'சேனல்' நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்,'' என எச்சரித்துள்ளார்.

'சுட்டுத் தள்ளியது' எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி, கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாண்ட்ஜூகிச் கோல் அடித்தார். இதைக் கொண்டாட வேகமாக வந்த அவர், அங்கிருந்த போட்டோகிராபர் யூரி கார்டிஸ் (மெக்சிகோ) மீது விழுந்தார். இதை கவனிக்காத மற்ற வீரர்களும் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். இருப்பினும் சமாளித்துக் கொண்ட யூரி, வீரர்களின் முகத்திற்கு நேராக 'கேமராவை' வைத்து போட்டோ எடுத்து (சுட்டு) குவித்து விட்டார். பின் வீரர்கள் கார்டிசிடம், 'காயம் ஏற்படவில்லையே,' என நலம் விசாரித்தனர். குரோஷியாவின் விடா, இவருக்கு முத்தம் தந்து அன்பை வெளிப்படுத்தினார்.

வருத்தத்தில் கேப்டன்

இங்கிலாந்து அணி அரையிறுதியில் வீழ்ந்தது. இதன் மூலம், 1966க்குப்பின் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கூறுகையில்,'' உலக கோப்பை தொடரில் எப்படியாவது பட்டம் வெல்வோம் என எண்ணி இருந்தோம். அரையிறுதியில் தோல்வியடைந்தது மிகப்பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை எப்படி விவரிப்பது என தெரியவில்லை. அதேநேரம் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் தலை நிமிர்ந்து நடக்கிறோம். இங்கிலாந்து ரசிகர்கள் பெருமைப்படும் அளவுக்கு விளையாடி உள்ளோம். இந்த அனுபவம், 'யூரோ' கோப்பை (2020) தொடரில் சாதிக்க உதவும்,'' என்றார்.

கென்ய மக்கள் எதிர்ப்பு

தடகளத்தில் அசத்தும் கென்யா உலக கோப்பை கால்பந்து தொடருக்கு ஒரு முறை கூட முன்னேறியது இல்லை. இருப்பினும், தற்போதைய தொடரின் பைனல் உள்ளிட்ட 4 போட்டிகளை பார்க்க கென்யாவின் 20 எம்.பி.,க்கள் ரஷ்யா சென்றனர். 'உள்ளூரில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்காமல், மக்கள் வரிப்பணத்தில் இவர்கள் எப்படி ரஷ்யா செல்லலாம்,' என மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கென்யா விளையாட்டுத்துறை அமைச்சர் ரஷித் கூறுகையில்,'' 6 எம்.பி.,க்களுக்கு மட்டும் அரசு செலவு செய்தது. மற்றவர்கள் சொந்த செலவில் பயணம் செய்துள்ளனர்,'' என்றார்.

வட போச்சே

குரோஷியா வீரர் நிக்கோலா காலினிச், 30. கடந்த 16ம் தேதி நடந்த நைஜீரியாவுக்கு எதிரான லீக் போட்டியில் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 85வது நிமிடத்தில் பயிற்சியாளர் மாற்று வீரராக களமிறக்க, கோபத்தில் மறுத்துவிட்டார். இதனால் காலினிச் தொடரிலிருந்து வெளியேற்றப்பட, நாடு திரும்பினார். அரையிறுதி போட்டியை வீட்டில் 'டிவி'யில் பார்த்தார். தற்போது குரோஷிய அணி பைனலுக்கு முன்னேறியதால், அணியில் இல்லாத ஏமாற்றத்தில் உள்ளார். இதை அறிந்த குரோஷியா ரசிகர்கள், 'வட போச்சே' எனக் கூறி சமூகவலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மீன் வீச்சு

கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டிலை எறிந்து எதிர்ப்பை வெளிப்படுத்துவர். புது அயிட்டமாக மீனை எறிந்துள்ளனர் கால்பந்து ரசிகர்கள். உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியின் துவக்கத்தில் இங்கிலாந்து அணி (1-0) முன்னிலை பெற்றது. அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து திடீரென இறந்த மீன் ஒன்று மைதானத்துக்குள் வீசப்பட்டது. எந்த ரசிகர், எதற்காக வீசினார் என கண்டறிய முடியவில்லை. பாதுகாப்பு குழுவினர் மீனை உடனடியாக அகற்றினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement