Advertisement

கோஹ்லி படைக்கு முதல் சவால்

நாட்டிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் இன்று துவங்குகிறது. இதில்,கேப்டன் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அசத்த காத்திருக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று நாட்டிங்காமில் நடக்கவுள்ளது.

இங்கிலாந்து மண்ணில் அடுத்த ஆண்டு (மே 30- ஜூலை 14) இதே காலகட்டத்தில் இந்திய அணி உலக கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இங்கு நிலவும் தட்பவெப்பநிலை, 'லெவன்' அணி தேர்வு என பல குழப்பத்திற்கு தற்போதைய ஒரு நாள் தொடர் தீர்வு தரலாம். சதம் அடித்து 'டுவென்டி-20' தொடரை கைப்பற்ற உதவிய துவக்க வீரர் ரோகித் மீண்டும் தவானுடன் கைகோர்க்கிறார்.

மாறுவாரா கோஹ்லி

மான்செஸ்டரில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில் லோகேஷ் ராகுல் 3வது இடத்தில் சதம் விளாசினார். இன்றும் இவரின் பேட்டிங் வரிசை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வழக்கமாக 'நம்பர்-3' இடத்தில் விளையாடும் கேப்டன் கோஹ்லி, 4வது வீரராக வரலாம். 'மிடில்-ஆர்டரை' கவனித்துக்கொள்ள அனுபவ வீரர்கள் ரெய்னா, தோனியுடன் அதிரடி நாயகன் பாண்ட்யா இருக்கின்றனர்.

கட்டை விரல் பகுதி காயத்தால் பும்ரா விலகியது பின்னடைவு. முதுகுப்பகுதி காயத்திலிருந்து புவனேஷ்வர் மீண்டுவிட்டால், உமேஷ் யாதவுடன் கைகோர்க்கலாம். புவனேஷ்வர் இல்லை எனில் ஷர்துல் தாகூர் அல்லது சித்தார்த் கவுல் இடம்பிடிக்கலாம். மான்செஸ்டரில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில் 5 விக்கெட் சாய்த்த மணிக்கட்டு மந்திரக்காரர் குல்தீப் எதிரணிக்கு நெருக்கடி தர வாய்ப்புள்ளது. தன் பங்கிற்கு சகால் பந்தை 'சுழற்ற' காத்துஇருக்கிறார்.

விளாசல் வீரர்கள்

இங்கிலாந்து அணி 'டுவென்டி-20'யில் சொதப்பினாலும், ஒரு நாள் போட்டியில் அச்சறுத்தும் வகையில் காணப்படுகிறது. சமீபத்தில் உள்ளூர் மண்ணில் ஆஸ்திரேலிய அணியை 5-0 என வீழ்த்தியது. இதில், நாட்டிங்காம் போட்டியில் அதிக ரன் (481) குவித்து உலக சாதனை படைத்தது.

ஜேசன் ராய், பட்லர், ஹேல்ஸ் என விளாசல் வீரர்களுக்கு பஞ்சம் இல்லை. இதைப்போல, கேப்டன் மார்கன், ஜோ ரூட், பேர்ஸ்டோவ் என பேட்டிங் வரிசை நீள்கிறது. 'வேகத்தில்' வில்லே, மார்க் வுட், ஸ்டோக்ஸ் இருந்தாலும் 'பார்மில்' இல்லாதது பலவீனம்.

96

இரு அணிகளும் இதுவரை 96 ஒரு நாள் போட்டியில் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து 39, இந்தியா 52 போட்டிகளில் வென்றுள்ளன. இரண்டு போட்டிகள் 'டை' ஆனது. 3 போட்டிகளுக்கு முடிவு இல்லை.

மழை வருமா...

போட்டி நடக்கவுள்ள நாட்டிங்காம் நகரின் இன்றைய வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 25, குறைந்தபட்சம் 13 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 10 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement