Advertisement

சிறுவர்களுக்கு சமர்ப்பணம்

தாய்லாந்து குகையில் கால்பந்து அணியை சேர்ந்த பயிற்சியாளர் மற்றம் 12 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். 18 நாள் போராட்டத்திற்குப்பின், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பெல்ஜியத்திற்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் கிடைத்த வெற்றியை இவர்களுக்கு பிரான்ஸ் வீரர் போக்பா சமர்ப்பணம் செய்துள்ளார். இது குறித்து போக்பா 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,' தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்டுள்ள சிறுவர்களே, இன்றைய நாளின் 'ஹீரோ'. இவர்கள் மிகவும் வலிமையானவர்கள். பெல்ஜியத்திற்கு எதிரான வெற்றியை சிறுவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்,' என, தெரிவித்துள்ளார்.

எல்லை மீறிய ரசிகர்கள்

உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு பிரான்ஸ் அணி முன்னேறி உள்ளது. இந்த உற்சாகத்தில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரசிகர்கள் இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 'நாங்கள் பைனலுக்கு முன்னேறிவிட்டோம்' என்று உற்சாகக்குரலில் சத்தமிட்டபடி, தெருக்களில் உலா வந்தனர். சிலர் வாகனத்தின் மீது ஏறி ரகளையை துவங்கினர். சாலையின் நடுவே குவிந்த ரசிகர்கள், போலீசார் அமைத்திருந்த 'பிளாஸ்டிக்' தடுப்பை துாக்கி எறிந்தனர். நிலைமை கட்டுப்பாட்டை மீறியதால், போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். இதைப்போல, பிரான்சின் நைஸ் நகரில் கொண்டாட்டத்தின்போது, வாணவேடிக்கை வெடிக்கப்பட்டது. அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பேர் சிக்கி காயம் அடைந்தனர்.

பெடரர் விருப்பம் என்ன

உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனல் ஜூலை 15ல் நடக்கவுள்ளது. அதே நாளில், மாலை நேரத்தில் விம்பிள்டன் டென்னிஸ் பைனல் (ஆண்கள் ஒற்றையர்) நடக்கிறது. இது குறித்து சுவிட்சர்லாந்தின் பெடரர் கூறுகையில்,'' விம்பிள்டன் பைனலுக்கு முன்னேற முடியுமா எனத்தெரியாது. ஆனால், பைனல் ஜூலை 15ல் நடந்தே ஆகும். என்னை்போன்ற வீரர்களுக்கு இதுதான் முக்கியம். உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனல் நேரத்தை மாற்ற முடியுமா என 'பிபா' நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும்,' என்றார் ஜாலியாக.

அடுத்த தொடருக்கு 'ரெடியா'

ரஷ்யாவில் இன்னும் 4 நாட்களில் உலக கோப்பை தொடர் முடிய உள்ளது. இதன்பின், 22வது 'பிபா' தொடர் கத்தாரில் 2022ல் நடக்கவுள்ளது. இதை, நடத்தப்போகும் விதம் குறித்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஜாம்பவான் பீலே (பிரேசில்), மாரடோனா (அர்ஜென்டினா) உள்ளிட்டோர் வெற்றி பெற்ற உலக கோப்பை போட்டியில், அணிந்திருந்த 'ஜெர்சி' பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த தொடர்களில் பயன்படுத்தப்பட்ட கால்பந்தை காணலாம். இது தவிர, கத்தாரில் உள்ள கலாசாரம் மற்றும் நினைவு சின்னங்களும் பார்வைக்கு இடம்பெற்றிருந்தன.

பழைய பமீலா...புதிய லீலை

அமெரிக்க நடிகை பமீலா ஆண்டர்சனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 1990களில் பிரபலமான 'பே வாட்ச்' தொடர் மூலம் சின்னத்திரையில் கலக்கினார். நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார். அம்மணிக்கு இப்போ வயது 51. ஏற்கனவே மூன்று 'பார்ட்னர்களுடன்' வாழ்ந்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானவர். தற்போது நான்காவதாக பிரான்ஸ் கால்பந்து அணி வீரர் அடில் ரமி,32, மீது மோகம் கொண்டுள்ளார். இருவருக்கும் 19 வயது வித்தியாசம். நேற்று முன் தினம் பிரான்ஸ்-பெல்ஜியம் மோதிய போட்டியை நேரில் கண்டு களித்தார் பமீலா. பிரான்ஸ் வென்றதும், தனது காதலன் அடில் ரமிக்கு, 'காலரியில்' இருந்தவாறு அன்பு முத்தங்களை பறக்கவிட்டார்.

ஆமை ஆட்டம் தெரியுமா

கால்பந்து 'ஜூரம்' ஆமையை கூட தொற்றிக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் லீட்சில் உள்ள காப்பகத்தில் 'டார்டோ' என்ற பெயரில் பெரிய ஆமை ஒன்று உள்ளது. இது, கால்பந்து விளையாடும் அழகே தனி தான். முதலில் மூக்கால் கால்பந்தை நகர்த்துகிறது. பின் தலையை உள்ளே இழுத்துக் கொள்கிறது. அதே வேகத்தில் தலையை வெளியே தள்ளி பந்தை நேர்த்தியாக முட்டுகிறது. இதை பார்க்கும் போது வீரர்கள் தலையால் முட்டி கோல் அடிப்பது போல் இருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement