இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை இடுபொருட்களை நாமே தயாரிப்பது மட்டுமே லாபம் தரும். ஒன்றை தொட்டு ஒன்றாக உருவாக்க வேண்டும் என்கிறார் நாமக்கல் சிறுகிணற்றுபாளையத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்.
எட்டாண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் லோகநாதன், தனது அனுபவங்களை விவரித்தார்.
நாமக்கல்லில் கரும்பு, மரவல்லிகிழங்கு சாகுபடி தான் அதிகம் நடைபெறுகிறது. இவற்றுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதோடு தினசரி வருமானம் கிடைக்காததால் மாற்றுப்பயிருக்கு மாறினேன். மொத்தமுள்ள 3 ஏக்கரில் பன்னீர்ரோஸ், காய்கறி, பிற பயிர் சாகுபடி செய்கிறேன்.
நான்காண்டுகளுக்கு முன் பன்னீர்ரோஸ் குச்சி நட்டு சாகுபடி செய்தேன். ஓரளவு நல்ல லாபம் கிடைத்தது. அனைத்து குச்சிகளையும் அகற்றினேன். உடைத்தால் ஒரே பருப்பாக இருக்கும் விதை சோளம், கம்பு போன்றவை, இரு பருப்பு விதைகள் தட்டைபயறு, பாசிப்பயறு ரகங்கள், சூரியகாந்தி எள் விதைகள் எண்ணெய் வித்துகள், கடுகு, வெந்தயம், வாசனை திரவியங்கள். இவற்றில் வகைக்கு நான்கு வீதம் 16 வகை பயிர்களை நிலத்தில் விதைத்தேன்.
30 நாட்களுக்கு மேல் அவை பூவிடும் பருவத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழுதேன். அதன் பின் சாணி குப்பையை இட்டு உழவு ஓட்டினேன். தலா 50 சென்டில் காய்கறி, சம்மங்கி, மல்லிகை, ரோஸ் பயிரிட்டுள்ளேன். வழக்கமாக தானியங்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்து கிடைப்பதில் தான் விவசாயிகள் கவனம் செலுத்துவர். இந்த 16 வகை பயிர் சாகுபடி மூலம் ஒரே நேரத்தில் பேரூட்ட சத்துகளும், கால்சியம், மக்னீசியம், சல்பர் போன்ற 2ம் நிலை சத்துகள் மற்றும் 3ம் நிலை நுண்ணுாட்ட சத்துகளும் பயிர்களுக்கு கிடைக்கிறது.
பூ சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் நுட்பங்களை கற்றுத் தருகிறேன். மீன் அமிலம், உயிர் உரம், சூடோமோனஸ் விரிடி, பவேரியா பேசிலியா, பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ், மெட்டாரைசியம், வெர்ட்டிசீலியம் லக்கானி, பேசில்லோமைசிஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை சொந்தமாக வயலிலேயே தயாரிக்கிறேன். நான் படித்தது பத்தாவது தான். ஆனால் உயிர்உரங்களுக்கான தாய்த்திசு (கல்ச்சர்) வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக தயாரிக்க கற்றுக் கொண்டேன். பழைய முறையில் மீன்அமிலம் தயாரிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டும். நான் கண்டுபிடித்த புதிய முறையில் ஒரு கிலோ மீனுக்கு இரண்டரை கிலோ கரும்புச்சாறு தேவைப்படும். வெறும் 3 நாட்களில் மீன்அமிலத்தில் மீன் கரைந்து முழு உரமாக மாறியிருக்கும். இதை கற்றுக் கொண்டால் கடைகளில் ரூ.6000 க்கு உரம் வாங்க வேண்டியிருக்காது. வெறும் ரூ.400 ல் செலவு முடிந்து விடும். நாட்டுமாட்டில் இருந்து எடுக்கப்படும் சாணத்தின் மூலம் 'சயனோ பாக்டீரியா' தயாரிப்பு முறையில் திருச்சி பாரதிதாசன் பல்கலை பேராசிரியை மல்லிகா கண்டுபிடித்தார். அதை முத்துார் சண்முகம் எனக்கு கற்றுத்தந்தார். இதில் நுாறு சதவீதம் தழைச்சத்து உள்ளது. விதை முதல் அறுவடை வரை எல்லா பருவத்திலும் தண்ணீருடன் சேர்த்து பாய்ச்சலாம். ஆக்சிஜன் அதிகம் உள்ளதால் பூக்கள் சீக்கிரம் வாடாது. பன்னீர் ரோஜாவின் காம்பு நீளமாக, மல்லிகைப்பூ அடர்த்தியாக இருக்கும். சீசன் இல்லாத காலத்தில் பூ சாகுபடி செய்யும் நேர்த்தியை சக விவசாயிகளுக்கு கற்றுத் தருகிறேன்.
பாகல், புடலை, சுரைக்காய், சிறகு அவரை, பொரியல் தட்டை எனப்படும் சிவப்பு காராமணியில் நாட்டு ரக காய்கறி விதைகளை உற்பத்தி செய்து விதைக்கிறேன். மரவெண்டை சாகுபடியும் செய்கிறேன். மரம் மாதிரி பத்தடி உயரம் வரை வளரும். ஓராண்டாக மரத்தில் மாதம் 5 கிலோ காய்க்கிறது. இந்த ரகம் பாரம்பரிய நாட்டு ரகம். ஒரு விவசாயியிடம் இருந்து வாங்கினேன். இயற்கையோடு இணைந்து வாழ பழகிவிட்டால் பயிர்கள் மட்டுமல்ல மண்ணும் நீரும் காற்றும் ஆரோக்கியமாக மாறிவிடும். அது விவசாயிகள் கையில் தான் உள்ளது என்றார்.
அலைபேசியில் தொடர்பு கொள்ள : 97871 55461.
- எம்.எம்.ஜெயலெட்சுமிமதுரை
இயற்கைக்கு சொந்தக்காரர் இந்த விவசாயி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!