தற்காலத்தில் விவசாய நிலங்கள் அழிந்துகொண்டே வருகிறது. புவி வெப்பமயமாதல், இயற்கை வளங்களை அழிப்பது, அதிக மக்கள் தொகை, முறையான நிலமேலாண்மை இல்லாத காரணங்களினால் நிலங்களும் தரிசாக மாறி வருகிறது. இயற்கை சீற்றத்தால் வனங்கள் அழிக்கப்பட்டு வருவதால் ஆண்டின் சராசரி மழை அளவு குறைந்துகொண்டே வருகிறது.
மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முக்கியமான விதைப்பு முறைகளில் ஒன்றாக விதைப்பந்து கருதப்படுகிறது. களிமண், செம்மண், மட்கிய உரம், உயிர்உரங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் மரவிதைகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் விதை உறக்கநிலை, கடின விதையுறை இருந்தால் விதை முளைப்புத்திறன் குறையும். இதனை அதிகரிக்க கையாள வேண்டிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திய பின்பே விதைப்பந்துகள் தயாரிக்க வேண்டும். வாகை, புளியவிதை, நாவல், பூவரசு, ஆலமரம், அரசமரம், புங்கன், குமிழ் மற்றும் கொன்றை போன்ற மரவிதைகள் பயன்படுத்தப்படுகிறன.
விதைநேர்த்தி அவசியம்
வாகை, புளியமரம், அரசமரம், குமிழ், பூவரசு, கத்தி சவுக்கு மர விதைகள் கடின விதை உறை கொண்டவை. வாகை விதைகளை வெந்நீரில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். புளிய விதைகளை 5 நிமிடங்களும் பூவரசு, கத்தி சவுக்கு விதைகளை 15 நிமிடங்களும் வெந்நீரில் ஊறவைக்க வேண்டும். குமிழ் விதைகளை குளிர்ந்த நீரில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அரச விதைகளை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்த பின் அடர் கந்தக அமிலத்தில் 2 நிமிடங்கள் ஊறவைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைப்பந்து தயாரிக்க
செம்மண், களிமண், மட்கியஉரத்தை ஒன்றாக சல்லடையால் சலிக்கவேண்டும். தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து மண் கலவை சிறிது எடுத்து விதைகளை நடுவில் வைத்து ஒரு அங்குல விட்டம் கொண்ட பந்தாக உருட்டவேண்டும். இவற்றை நிழலில் 2 நாட்கள் உலர்த்த வேண்டும். விதைப்பந்து தெளிப்பதால் நாம் பூமியை பசுமையாகவும், வன வளத்தை மேம்படுத்தவும் தரிசு நிலங்களை வளப்படுத்தவும், காடுகளில் மரங்களின் எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகப்படுத்தலாம்.
விதைப்பந்து கொண்டு காடுகள், தரிசுநிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் பசுமை வண்ணத்தை பரப்பிடலாம்.
- சுஜாதாதுறைத்தலைவர்
அலெக்ஸ் ஆல்பர்ட் இணைப்பேராசிரியர்
நிலவரசி, பத்மப்ரியா ஆராய்ச்சியாளர்கள்
விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை, வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
வனத்தை வண்ணமாக்கும் விதைப்பந்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!