பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பக கேன்சர் வருவதை தான் பார்க்க முடிந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஏதோ மாற்றம் நிகழ்ந்து உள்ளது. 21 வயதிலேயே மார்பக கேன்சர் பாதிப்பு வருகிறது.
எந்த வயதில் வந்தாலும், நான்கு நிலைகளில் முதல் மூன்று நிலைகளில் இருக்கும் போது, அறுவை சிகிச்சை அவசியம்.
கட்டி எந்த நிலையில் இருக்கிறது, அதன் தன்மை, அளவைப் பொருத்து, கட்டி, அதைச் சுற்றியுள்ள சதைப் பகுதியை மட்டும் அகற்ற வேண்டுமா, அல்லது பாதித்த பகுதியில் எந்த அளவு அகற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வோம்.
வேறு இடத்தில் பரவாத பட்சத்தில் கட்டியை மட்டும் அகற்றலாம். 70 சதவீதம் பாதிப்பு வரை, பாதித்த பகுதியை மட்டும் அகற்றுவது மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை. அதற்கு மேல் பாதிப்பு இருந்தால், முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டும். அதே நேரத்தில், மார்பக கேன்சர் என்று உறுதியானதும், அறுவை சிகிச்சையில் முழு மார்பகத்தையும் அகற்றுவது எந்த பலனையும் தராது.
சிறிய கட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதியை அகற்றினால், மார்பகத்தில் பெரிதாக மாற்றம் தெரியாது. அதனால் அப்படியே விட்டு விடலாம். சற்று பெரிய கட்டியாக இருந்தால், பாதித்த பகுதியை தேவையான அளவு அகற்றிய பின், பின் பக்க விலா எலும்பு பகுதி, வயிற்றைச் சுற்றி இருக்கும் கொழுப்பு திசுக்களை எடுத்து, அகற்றப்பட்ட இடத்தில் வைத்து விடுவோம். விலாப்பகுதியில் உள்ள கொழுப்பு திசுக்கள் மார்பகத்தில் உள்ளவை போன்றே இருப்பதால், அறுவை சிகிச்சைக்கு பின் பெரிதாக வித்தியாசம் தெரியாது. கொழுப்பு திசுக்கள் போதுமான அளவு இல்லாவிட்டால் தசைகள் பயன்படும்.
விலா எலும்பிற்கு பின் பக்கம் உள்ள தசைகளை அகற்றுவது, விளையாட்டு வீரர்களைத் தவிர மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. பக்கவாட்டில் உள்ள கொழுப்பு செல்களை எடுக்கும் போது, எடுத்த இடத்தில் கொழுப்பு திசுக்கள் மீண்டும் உருவாகி விடும்; தோற்றத்தில் பெரியதாக மாற்றம் தெரியாது.
மார்பக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை, கடந்த 2016ல் இருந்து தான் நடைமுறையில் உள்ளது. நம் நாட்டில் 2020 முதல் செய்கிறோம். கட்டியை அகற்றும் இடத்தில் உள்ள ரத்த நாளங்களில், எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அகற்ற வேண்டும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்.
டாக்டர் கிருத்தி கேத்தரின் கபீர்,
ஆங்கோபிளாஸ்டி அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.
மார்பக கேன்சருக்கு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!