Advertisement

சிறந்ததை புரிய வைத்த இயற்கை!

பாதி பேர் அதீத கவனத்துடன், 'அதிக புரத உணவு சாப்பிடுகிறேன்...' என்று, உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர். இன்னொரு தரப்பினர், உடல் நலத்தைப் பற்றிக் கவலைப் படாமல், எந்த உடல் உழைப்பும் இல்லாமல், அலுவலக வேலை, காரில் பயணம், ஒரு 20 நிமிடங்கள் நடந்து விட்டு, 'நான் நடைபயிற்சி செய்தேன்...' என்று, திருப்திபட்டுக் கொள்கின்றனர்.

வெளிநாட்டில் இருக்கும் சிறப்பு மருத்துவர், ஒரு நாளில், 10 - 20 நோயாளிகளைப் பார்ப்பார்; நம் நாட்டில், 50 - 60 பேரை பார்க்கின்றனர். ஒருவருக்கு, 15 நிமிடங்கள் என்று வைத்துக் கொண்டாலும், கையில் வைத்திருக்கும் அனைத்து, 'ரிப்போர்ட்டு'களையும் பார்த்து, பேசி, ஆலோசனை வழங்க எந்த டாக்டருக்கும் நேரம் இல்லை.

வாழ்க்கை முறை மாற்றத்தால், என்ன மாதிரியான பிரச்னைகள் அதிகரித்து வருகினறன... எப்படி கவனமாக, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை முறை மாற்றத்தால் வந்துள்ள பிரச்னைகளில் பிரதானமானது, 'மெட்டபாலிக் சிண்ட்ரோம்' எனப்படும், உடலின் உள் செயல்பாடுகளில் ஏற்படும் கோளாறுகளான இன்சுலின் எதிர்ப்பு, அதீத கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம். இவற்றில் ஏதாவது ஒரு பிரச்னை ஒருவருக்கு இருக்கிறது என்பது தெரிந்தாலே, பிரச்னையின் தீவிரம் சுலபமாகப் புரியும்.

இன்சுலின் ஹார்மோனை கணையம் சுரக்கிறது; சாப்பிடும் ஒவ்வொரு கலோரிக்கும், இவ்வளவு இன்சுலின் தேவை என்பதை, கணையத்தில் இயற்கையாகவே உள்ள, 'சென்சார்' கணக்கிடும். இரைப்பைக்குள் உணவு சென்றதும், அந்த வேளைக்கு சாப்பிட்ட உணவுக்கு தேவையான இன்சுலினை கணையம் சுரக்கும்.

உதாரணமாக, ஒரு இட்லியில், 40 கலோரி இருக்கும். நான்கு இட்லிகள் சாப்பிட்டால், 160 கலோரிகள். சற்று பெரிய இட்லி என்றால், 200 கலோரிகள். இட்லி சாப்பிட்ட, 10 நிமிடத்தில, 200 கலோரி வந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்ட கணைய சென்சார், அதற்கேற்ப 1- 2 யூனிட் இன்சுலின் தேவை என்று கணக்கிட்டு, அந்த அளவு இன்சுலினைச் சுரந்து, ரத்தத்தில் கலக்கச் செய்யும்.

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவருக்கு, 50 கிராம் குளுக்கோசை நீரில் கலக்கி குடிக்கக் கொடுத்தால் கூட, ரத்த சர்க்கரை அளவு, 100-எம்.ஜி/- டெ.லி., என்ற அளவுக்கு மேல் போகாது. சர்க்கரை கோளாறு இல்லாத எந்த வயதினராக இருந்தாலும், 500 கிராம் இனிப்பு சாப்பிட்டாலும், ரத்த சர்க்கரையின் அளவு, 130-எம்.ஜி / டெ.லி.,க்கு மேல் ஏறாது. இப்படி இருப்பது, உடல் உள்செயல்பாடு கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று அர்த்தம்.

குறிப்பிட்ட உணவை சாப்பிடும் போது, எவ்வளவு நேரத்திற்குள் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்தே, அந்த உணவின், 'கிளைசிமிக் இண்டெக்ஸ்' கணக்கிடப்படும். இனிப்பு வகைகள், மைதா, வெள்ளை சர்க்கரை போன்றவற்றை சாப்பிட்டால், உடனடியாக ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அரிசி, கோதுமையை ஒப்பிடும் போது, சிறு தானியங்களில் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவு; மெதுவாகவே ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

எங்கள் கிராமத்தில் எல்லா சிறுதானியங்களும் பயிர் செய்வோம். 30 ஆண்டு களுக்கு முன் ஒரு கிலோ வரகரிசியோ, கம்போ, 10 ரூபாய் கொடுத்து வாங்க ஆள் இருக்க மாட்டார்கள்.

இன்று கிலோ, 120 ரூபாய்க்கு விற்கிறது. அரிசியை விட சிறுதானியங்கள் விலை அதிகம்; அரிசி வாங்க முடியாத பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கள் மட்டுமே, அன்று சிறுதானியங்கள் சாப்பிட்டனர்.

வயலில் கடுமையாக உழைத்தனர். அதனால் சர்க்கரை கோளாறு வரவில்லை. இதுதான் சிறந்தது என்று இயற்கை புரிய வைத்து விட்டது; அனைவரும் திரும்பி பார்க்க துவங்கி உள்ளனர்.

டாக்டர் என்.தமிழ்செல்வம்,
பொது மருத்துவம் மற்றும் மூட்டுத் தசை இணைப்பு திசு நோயியல் நிபுணர்,
சென்னை.
97894 81143

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement