Advertisement

ஆதாயம் குறைந்தாலும் அனைத்தும் ஆர்கானிக் மயமே

ஆறு ஏக்கர் முழுவதும் இயற்கை சாகுபடி முறையில் நெல், காய்கறி சாகுபடி செய்கிறேன். விளைச்சல் குறைவாக கிடைத்தாலும் நஞ்சில்லா பொருட்களை உற்பத்தி செய்வது பெருமை என்கிறார் மதுரை மேற்கு வைரவநத்தத்தை சேர்ந்த விவசாயி பொன்மணி.

ஒருங்கிணைந்த பண்ணையமே எனது நோக்கம். நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறேன். வேலியிட்ட வயலில் அவை சுதந்திரமாக மேயும். நோய் எதிர்ப்புச்சக்தி பெறுவதும் கூடுதல் லாபம் தான். அடுத்து ஆடு வளர்க்க உள்ளேன். அதற்கு வெள்ளோட்டமாக 50 சென்ட் நிலத்தில் வேலி மசால், அகத்தி தீவனம் வளர்க்கிறேன். ஆடு வாங்கும் போதே தீவனம் தயாராக இருந்தால் வெளியில் செலவு செய்ய வேண்டியதில்லை.

50 சென்டில் கத்தரிக்காய், ஒரு ஏக்கரில் வெண்டை, ஒரு ஏக்கரில் தர்பூசணி அதில் ஊடுபயிராக புல்லட் மிளகாய் பயிரிட்டுள்ளேன். ஒன்றரை ஏக்கரில் சீரக சம்பா பயிரிட்டுள்ளேன். தோட்டக்கலைத்துறையில் இருந்து சொட்டுநீர்ப்பாசனத்திற்கு தேவையான உரம், தண்ணீர் செல்லும் வகையில் பாசன முறை அமைத்துத் தந்தனர். நிலப்போர்வை அமைத்து வெண்டை பயிரிடவும் மானியம் தந்தனர். சொட்டுநீர்ப்பாசனத்திற்கு 75 சதவீத மானியம் கிடைத்தது. 6 ஏக்கரிலும் சொட்டுநீர், உரம் கலந்து செல்லும் முறையில் தான் உள்ளது.

மாட்டுச்சாணத்துடன் இ.எம். கரைசலை சேர்த்து அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா சேர்த்து ஒருவாரம் வரை விட்டு விடுவோம். நிலப்போர்வை அமைப்பதால் பயிரை சுற்றி களைகள் வளர்வதில்லை. சொட்டுநீர் பயிர் வளரும் இடத்தில் மட்டும் கிடைக்கும். எந்த இடத்தில் விதைகளை துளையிட்டோமோ அந்த இடத்தில் இந்த கலவையை கொஞ்சம் கொட்டி, அதில் விதைகளை நட்டோம். ஜீவாமிர்தம், பத்துஇலை கரைசல், மீன்அமிலம் என வாரந்தோறும் மாற்றி மாற்றி சொட்டுநீருடன் கலந்து விடுகிறோம்.

வேம்பு, எருக்கு, ஆமணக்கு, நொச்சி, ஆவாரம், பப்பாளி உட்பட ஆடு தின்னாத 10 இலைகளை சேகரித்து பிய்த்துபோட்டு கோமியத்தில் ஊறவைப்போம். அடிக்கடி கையால் இலைகளை பிய்த்து போட்டு கலக்கி விட வேண்டும். வாரம் அல்லது பத்து நாட்களில் உரநீர் தயாராகி விடும். வடிகட்டி செடிகளுக்கு சொட்டுநீருடன் கலந்து தருகிறோம். எருக்கு இலையானது மற்ற பயிர்களின் போரான் நுண்ணுாட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்யும்.

ஆறு ஏக்கரும் ஆர்கானிக் முறையில் தான் சாகுபடி செய்கிறோம். பூச்சிகள் வருவதற்கு முன்பாக தடுப்பது தான் இயற்கை விவசாயத்தின் முதற்படி நோய்த் தாக்குதலுக்கு என பிரத்யேகமாக எதுவும் செய்ததில்லை. ஜீவாமிர்தம், இலை கரைசல், மீன்அமிலம் எல்லாமே மண்ணுக்கு அளிக்கும் ஊட்டச்சத்தாக இருப்பதால் பயிர்கள் நோய்த்தாக்குதலுக்கு எதிராக வேலை செய்கிறது. மண் வளத்தையும் அதிகரிக்கிறது. கத்தரி, வெண்டைச் செடிகளில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தி ஒரு ஏக்கரில் 10 இடங்களில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்துள்ளோம்.

ஐந்தாண்டுகளாக ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். இதிலும் சொத்தை கத்தரிக்காய் வரும். ராக் பாஸ்பேட், 'வாம்' உடன் கம்போஸ்ட் கலந்து மண்ணுக்கு உரமாக வைக்கிறோம். இவை 'பயோ பெர்ட்டிலைசர் ஏஜன்டாக' செயல்பட்டு மண்ணில் உள்ள சத்துகளை பயிருக்கு தருகிறது.

வெண்டையில் 'நாம்தாரி' ரக விதைகளை மானியமாக தந்தனர். இதன் சிறப்பே 5 - 6அடி உயரம் வளரும். ஒரு செடியில் 12 கணு இருப்பதால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு காய் காய்க்கும். 45 முதல் 50 வது நாளில் இருந்து காய் காய்க்கும். ஒருநாள் விட்டு ஒருநாள் வீதம் 40 முறை அறுவடை செய்கிறோம். வழக்கமாக ஏக்கருக்கு ஒன்றரை கிலோ விதை தேவைப்படும். நாங்கள் விதைத்து முக்கால் கிலோ அளவு தான். ரசாயன முறையில் 2 மடங்கு அறுவடை கிடைக்கும்.

சீசன் என்றில்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கும் போது உற்பத்தி குறைவு தான். மதுரையில் கடையில் வைத்து விற்கிறேன். எப்போதுமே கிலோ ரூ.40க்கு காய்கறிகளை விற்கிறேன் என்றார்.

மதுரை மேற்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் ஜனரஞ்சனி கூறுகையில்,''தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு நிலப்போர்வை, நீர்வள நிலத்திட்டத்தின் கீழ் ஒரு எக்டேருக்கு தேவையான வெண்டை விதைகள், பிரதமரின் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் என அடுத்தடுத்த மூன்றாண்டுகளில் பயன்பெற்றுள்ளார்'' என்றார்.

விவசாயிடம் பேச 98940 65061

எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement