Advertisement

எதிர்பாராத எல்லா இறப்புக்கும் 'ஹார்ட் - அட்டாக்' காரணம் இல்லை!

சமீப நாட்களில் எதிர்பாராமல் நிகழும் இறப்புகள் பற்றி நிறைய செய்திகளை கேள்விப்படுகிறோம்; படிக்கிறோம்.

இது போன்ற இறப்புகளுக்கு சொல்லும் காரணம் வேண்டுமானால், 'மாரடைப்பு' என்று இருக்கலாம். ஆனால், எல்லா இறப்புகளுக்கும் மாரடைப்பு தான் காரணம் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது.

சிலருக்கு, 'ஸ்ட்ரோக்' எனப்படும் பக்கவாதம், வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வெடிப்பதால், இதயத்தில் இருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுதல் என, இவற்றால் கூட எதிர்பாராத மரணம் ஏற்பட்டு இருக்கலாம்.

வீட்டிலேயே நிலை குலைந்த ஒருவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, வழியில் அல்லது மருத்துவமனை சென்றவுடன் இறந்து விட்டால், 'இ.சி.ஜி., எக்கோ' போன்ற எந்த பரிசோதனையும் செய்திருக்க மாட்டோம்.


ரத்த அழுத்தம்

பெரும்பாலான நேரங்களில் இறப்புக்குக் காரணம், 'ஹார்ட் - அட்டாக்' என்று பொதுவாக சொன்னாலும், பிரேதப் பரிசோதனை செய்யாமல், 'மாரடைப்பால் தான் இறந்தார்' என்று, உறுதியாக சொல்ல முடியாது.

எதிர்பாராமல் ஏற்படும் இதய செயலிழப்பிற்கு காரணம், ஆரம்பக் கட்ட அறிகுறிகளை அலட்சியம் செய்வதுதான். வாயுப் பிரச்னை என்றால், சோடா குடித்து விட்டு, நாமாகவே வாயுத் தொல்லை தான் என்று விட்டு விடுகிறோம். குறிப்பிட்ட வயதிற்குப் பின், ஆண்டிற்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்யா விட்டால், என்ன பிரச்னை இருந்தது என்பதே தெரியாது. கடைசி நிலையில், 'ஹார்ட் - அட்டாக்' வந்த பின்னர் தான், அதற்கான காரணம் தெரிய வரும்.

பிரச்னை பெரிதாகும் வரை, பலருக்கு, சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.

நம் நெருங்கிய ரத்த சொந்தங்களில் யாராவது, 40 - 50 வயதிற்குள் இறந்தால், ரத்த சொந்தங்கள் அனைவரும், அதாவது, அவருடன் மரபியல் ரீதியான தொடர்பு இருக்கும் அனைவரும், முழு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; 'அவருக்கு வந்து விட்டது, நமக்கு வராது' என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

குறிப்பாக துாக்கத்திலேயே இறப்பது, அதிவேகமாக உடற்பயிற்சி செய்யும்போது, 'தம்' கட்டி விளையாடும் போது இறக்க நேரிடலாம். 12, 13 வயதில், விளையாடும் போது எதிர்பாராத இறப்பு ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

30 வயதில் ஒருவர் இறந்தால், அது, மரபியல் சார்ந்த நோய்கள் எல்லாம் மிகக் சிறிய வயதிலேயே பிரச்னையை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை; எனவே, 10 வயதிற்கு மேல் அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும்.

அப்படி செய்யும் போது, குறைந்தபட்சம் பிரச்னை இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்து விடும்.

ரத்தப் பரிசோதனையில் கொழுப்பின் அளவு சராசரியாக இருந்தாலும், டாக்டரின் ஆலோசனை பெறாமல் அப்படியே விட்டுவிடக் கூடாது.

கொழுப்பின் அளவு சரியாக இருக்கிறது என்பதை மட்டும் காரணமாக வைத்து, ஹார்ட் - அட்டாக் வராது என்று சொல்ல முடியாது; கொழுப்பின் அளவு சரியாக இருந்தாலும், 50 சதவீதம் பேருக்கு ஹார்ட் - அட்டாக் வருகிறது.

என்ன அறிகுறி இருக்கிறது, குடும்ப பின்னணி, அவரவருக்கு இருக்கும் அபாயம், சிகரெட், மதுப் பழக்கம்... இவற்றை அடிப்படையாக வைத்தே, மாரடைப்பு வருமா, வராதா என்று சொல்ல முடியும்.

குறிப்பாக, கொரோனா தொற்றுக்குப் பின், நீண்ட நாட்களாக உடல் பிரச்னை பற்றி ஆய்வுகள் நடக்கின்றன; முடிவுகள் முழுமையாக இன்னமும் தெரிவதில்லை. எனவே, எல்லாமே சரியாக இருந்தாலும், எதிர்பாராமல், ரத்த நாள அடைப்பு அதிகமாவதோ, வெடிப்பதோ, அதிகரித்து உள்ளது.

'இ.சி.ஜி., எக்கோ, டிரெமில்' பரிசோதனையில், பெரும்பாலும் இதய ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளதா என்று தெரிந்து விடும். இதையும் மீறி சந்தேகம் இருந்தால், அடுத்த கட்டம் என்னவென்று டாக்டர் தான் முடிவெடுக்க முடியும்.


கொரோனாவிற்கு பின்...

இரண்டு பிரச்னைகளை அதிகமாக பார்க்கிறோம். முதலாவதாக, கொழுப்பு அல்லாத ரத்தக் கட்டிகள் உருவாவது அதிகரித்துஉள்ளது.

இரண்டாவதாக, அடைப்புக் குறைவாக இருந்தும், அந்த அடைப்பு வெடித்து, மாரடைப்பு ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது.

அதாவது, 80 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால் தான், 'ரிஸ்க்' என்று நினைத்தோம்.

இப்போது, அப்படி இல்லாமல், 10 - 20 சதவீதம் அடைப்பு இருந்தாலே, வெடித்து, அதன் உள்ளே இருக்கும் நச்சுப் பொருள் கசிந்து, ரத்தக் கட்டியாக மாறி, 'ஹார்ட் - அட்டாக்'கில் முடிகிறது.

டாக்டர் நரேந்திரன் பாண்டுரங்கன்,
இதய அறிவியல் துறை,
மேத்தா மருத்துவமனை,
சென்னை
73587 12006

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement