Advertisement

கர்ப்பப்பை இல்லாதவர்களும் குழந்தை பெறலாம்!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது, புதிய நவீன அறுவை சிகிச்சை முறை. இது, முதன்முறையாக, 2013ல் சுவீடன் நாட்டில் செய்யப்பட்டது.

சில வாரங்களுக்கு முன், எங்கள் மையத்தில் இரண்டு கர்ப்பப்பை அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம்; இது, தென்னிந்தியாவில் முதலாவது, நம் நாட்டில் இரண்டாவது.

எங்கள் மையத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரு பெண்களும் பிறவியிலேயே கர்ப்பப்பை இல்லாமல் பிறந்தவர்கள். இதற்கு, 'எம்.ஆர்.கே.ஹெச்., சின்ட்ரோம்' என்று பெயர்.


ரத்த உறவுகள்

இவர்களுக்கு கர்ப்பப்பை இருக்காதே தவிர, கருக்குழாய் கருமுட்டை இருக்கும். 16 வயது ஆன பின், இன்னும் மாதவிடாய் வரவில்லையே என்று சந்தேகப்பட்டு அழைத்து வரும்போது, 'ஸ்கேன்' செய்து பார்த்தால், கர்ப்பப்பை இல்லாமல் இருக்கும். 5 ஆயிரம் பெண்களில் ஒருவர் கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கும் அளவிற்கு, இது சகஜமான பிரச்னை.

இப்படி பிறக்கும் பெண்களுக்கு, இயல்பாக குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. வாடகைத் தாய் அல்லது தத்து எடுப்பதன் மூலம் தான் குழந்தை பெற முடியும். கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சையின் முக்கிய நோக்கமே, குழந்தை பெறுவது தான். கர்ப்பப்பை இல்லாதவர்களும் தாய்மையை உணரலாம். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதை பெரும்பாலும் பெண்கள் விரும்புவதில்லை.

பிறவியிலேயே, சிறிய கர்ப்பப்பையுடன் பிறப்பவர்கள், கர்ப்பப்பை இயல்பாக செயல்படாமல் போனவர்கள், கேன்சர் உட்பட பல காரணங்களால் கர்ப்பப்பை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள், திருமணமாகி, 18 - 40 வயதிற்குள் இருப்பவர்களுக்கு மட்டும், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.

பல நேரங்களில், 'எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின் பிரச்னையாகி, கர்ப்பப்பை நீக்க வேண்டியதாயிற்று. இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம்; கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யுங்கள்' என்கின்றனர். அப்படி செய்ய மாட்டோம்.

யார் தானம் கொடுக்கலாம்?

சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய், அக்கா, அத்தை, சித்தி என்று, நேரடியான ரத்த உறவுகள் தான் கர்ப்பப்பை தானம் தர முடியும்; இது தவிர, மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்தும் தானமாகப் பெறலாம்.

இருவரின் ரத்த வகையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மேலும், திசு பரிசோதனையும் செய்வோம். கொடுப்பவருக்கும், தானமாக பெறுபவருக்கும், சர்க்கரை கோளாறு, 'ஹெப்படைடிஸ் பி' தொற்று, உயர் ரத்த அழுத்தம், ஹெச்.ஐ.வி., தொற்று போன்ற எந்த தொற்று நோய்களும் இருக்கக் கூடாது; அப்போது தான் தானம் பெற்ற கர்ப்பப்பை நன்றாக வேலை செய்யும்.

அறுவை சிகிச்சை

மாற்று கர்ப்பப்பை பொருத்துவதற்கு முன், பெண்ணிடம் இருந்து கரு முட்டையும், அவர் கணவரிடமிருந்து விந்தணுவும் பெற்று, இரண்டையும் இணைத்து, குறைந்தது ஆறு கரு உருவாக்கி, பரிசோதனைக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டியது அவசியம்.

இதன்பின், ஆறு மாதங்கள் கழித்து, கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்வோம்; புதிய கர்ப்பப்பை பொருத்திய மூன்று மாதங்களில் மாதவிடாய் சுழற்சி துவங்கும்.

தானம் கொடுத்தவர், 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிற்கும் வயதில் இருந்தாலும், தானம் பெற்றவரின் உடலில், 'ஹார்மோன்' செயல்பாடு சீராக இருந்தால், மீண்டும் உயிர் பெற்று, கர்ப்பப்பை, இயல்பாக செயல்பட துவங்கும். ஆறு மாதங்கள் கழித்து, கருவை கர்ப்பப்பையில் வைத்து கண்காணிப்போம்.

தானம் பெற்ற உறுப்பை, தானம் பெற்றவரின் உடல் நிராகரிக்காமல் இருக்க, கர்ப்பத்தை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில். 'இம்யுனோ சப்ரசன்ட்' மாத்திரை கொடுப்போம். கர்ப்ப காலம் முடிந்ததும், 'சிசேரியன்' செய்தே குழந்தையை எடுக்க வேண்டும்.

மாற்று கர்ப்பப்பை ஐந்து ஆண்டுகள் இருக்கும். இதற்குள் ஒன்று அல்லது இரண்டு குழந்தையை பெற்று விட்டு, கர்ப்பப்பையை அகற்றி விட வேண்டும் என்பதே விதி.

கிராமத்தில் இருந்து வரும் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு, 'கிரவுட் பண்டிங்' எனப்படும் குழு நிதி வாயிலாக உதவி செய்கிறோம். இவர்களை, அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்த உள்ளோம்.


டாக்டர் பத்ம பிரியா விவேக்,
மகப்பேறு மருத்துவர்,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை.
044 44777000

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement