மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலத்தில் எள் நன்கு விளையும். 150 மி.மீ. தண்ணீர் மட்டுமே தேவையான எள் 80 முதல் 90 நாள் பயிராகும். மானாவாரியாகவும் பயிரிடலாம். எள் விதைகள் அளவில் சிறியதானால் முலாம் பூசி விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
விதையால் பரவும், மண்மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்த விதைநேர்த்தி அவசியம். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உலர் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண கொல்லியை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் கலந்துவிட வேண்டும். பூஞ்சாண மருந்து விதைநேர்த்தி செய்த பின் 50 மில்லி அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா அல்லது 50 மில்லி அசோஸ்பாஸ் திரவ உயிர்உரங்களுடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
இதன் மூலம் பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்கிறது. நுண்ணுயிர் விதைநேர்த்தி செய்த விதையை நிழலில் உலர வைத்து 24 மணி நேரத்திற்குள் விதைக்கவேண்டும்.
எள்ளின் விதைகள் அளவில் சிறிதாக இருப்பதால் முலாம் பூசுதல் அவசியம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ எள் விதை தேவை. 500 மில்லி தண்ணீரில் 20 கிராம் கார்பாக்ஸில் மீத்தைல் செல்லுலோஸ் துாளை கரைக்க வேண்டும்.
தனியாக 500 மில்லி தண்ணீரை கொதிக்க வைத்து கரைசலுடன் சேர்க்க வேண்டும். இதன் மூலம் தண்ணீரால் வரும் பாக்டீரியா, பூஞ்சாண தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். பசை கலவை ஆறிய பின் கால்கிலோ வேப்பிலை பொடியை கலந்து 3 பங்காக 3 பாத்திரத்தில் பிரித்து வைக்க வேண்டும்.
முதல் பாத்திரத்தில் ஒரு கிலோ எள் விதையை கலந்து அரைமணி நேரம் உலரவிட வேண்டும். அந்த விதையை அடுத்தடுத்த 2, 3ம் பாத்திரத்தில் கலந்து அரைமணி நேர இடைவெளியில் உலரவிட வேண்டும்.
இதனால் எள் விதைகள் முலாம் பூசப்பட்டு பெரிதாகிவிடும். இதனை கையால் துாவியோ இயந்திர முறையிலோ விதைத்தால் விதைகள் சீராக பரவும். பயிர்கள் பூஞ்சாண எதிர்ப்பு சக்தி பெறும். மானாவாரியில் ஈரப்பதம் கிடைக்கும் வரை வறட்சியை தாங்கி வளரும்.
தரமான எள் விதையில் 97 சதவீத சுத்தத்தன்மை, 9 சதவீத ஈரப்பதம், 80 சதவீதம் முளைப்புத்திறனுடன் இருத்தல் வேண்டும். விவசாயிகள், வேளாண் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்களிடம் உள்ள விதையின் தரத்தை மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அரசு விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு செய்யலாம்.
ஆய்வு கட்டணம் ரூ.80.
மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
கமலாராணி, ராமலட்சுமி, வேளாண் அலுவலர்கள்
விதைப்பரிசோதனை நிலையம்,
மதுரை.
94873 48707
எள்ளுக்கு முலாம் பூசவேண்டும்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!